×

கிடப்பில் போடப்பட்டதால் இடிந்துவிழும் பாலங்கள் விக்கிரவாண்டி -கும்பகோணம் சாலையில் திக், திக் பயணம்-தினசரி தொடரும் விபத்துக்கள்

விழுப்புரம் :  விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இச்சாலைகளில் கட்டப்படும் உயர்மட்ட மேம்பாலங்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, பாலத்திலிருந்து சிமெண்ட் கட்டைகள் இடிந்து விழுவதால் வாகன ஓட்டிகள் திக், திக் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விபத்துக்களும் ெதாடர்கதையாகி வருகின்றன.

சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு செல்ல விக்கிரவாண்டி வரை நான்குவழிச்சாலைஉள்ளது. அதன்பிறகு உள்ள சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான 165 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக கடந்த 2006ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 2010ம் ஆண்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டு, விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு ரூ.3,517 கோடியை கூடுதலாக ஒதுக்கியது. பின்னர் கடந்த 2018ல் தொடங்கிய சாலை பணி மூன்று பகுதிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ், தனியார் ஒப்பந்தத்தின் மூலம் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு வரை முதல் கட்டமாகவும், சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் வரை இரண்டாம் கட்டமாகவும், சோழபுரத்திலிருந்து தஞ்சை வரை மூன்றாம் கட்டமாக பணிகளை ஒதுக்கியது. இதில் முதல் கட்டமாக விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு வரை ரூ.711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இதில் கெடிலம், தென்பெண்ணை உள்ளிட்ட ஆறுகளின் மேல் 26 ஆற்றுப்பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ரயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச்சாலைகளும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

இரண்டாம் பகுதியான சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை ரூ.1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர், சேத்தியாத்தோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலைகளும், ரூ.100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழத்தரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன. மூன்றாம் பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன் கோயில் புளியம்தோப்பு வரை ரூ.1,345 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நிளத்தில் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் 20 இடங்களில் சாலை மேம்பாலங்களும், ஒரு சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

சாலை பணி தொடங்கும்போது, 2020ம் ஆண்டு இறுதிக்குள் முடிந்து 2021ம் ஆண்டு முதல் வாகன பயன்பாட்டிற்கு விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக விக்கிரவாண்டி முதல் கோலியனூர் கூட்டுரோடுவரை சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், மேம்பாலப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பண்ருட்டிவரை செல்லும் சாலைகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இடையில் கட்டப்பட்டு வரும் 6 உயர் மேம்பாலங்களில் சிமெண்ட் கட்டைகள் தற்போது ஒவ்வொன்றாக இடிந்து விழுந்து வருகின்றன. பலசமயம் வாகனங்கள் மீது விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவினால் பணிகள் தடைப்பட்டது. அதன்பிறகு, ஒப்பந்த நிறுவனம் தாக்குபிடிக்க முடியாமல் பணியை நிறுத்திவிட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது. தற்காலிகமாக தமிழ்நாடு அரசு சாலை மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நான்குவழிச்சாலையில், இருவழிச்சாலைகள் மட்டுமே சில இடங்களில் இருப்பதால் அதில் தாறுமாறாக செல்லும் வாகனங்களினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையினால் புதிய சாலையில் பல்வேறு இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளங்களில் பைக் மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் கடக்கும்போது எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திடீரென்று உள்வாங்கும் பாலம்

விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலையில் ஆறு, வாய்க்கால்கள், ஓடைகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள பாலங்கள் தற்போது திடீரென்று உள்வாங்கி வருகின்றன. அண்மையில் ஏ.குச்சிப்பாளையத்தில் மலட்டாற்றில் கட்டப்பட்ட பாலம் உள்வாங்கியது. மேலும், பல இடங்களில் பாலங்கள் இருபுறமும் உள்வாங்கியதால் அதிவேகமாக வரும் வாகனங்கள் திடீரென்று பிரேக் போட்டு பின்னால் வரும் வாகனங்கள் மோதிக்கொள்ளும் நிலை உள்ளது.

கல்லூரி பேருந்து மோதி 2 பேர் பலியானதுக்கும் இதுதான்காரணம் என்று கூறப்படுகிறது. வாணியம்பாளையம் அருகே சிறிய பாலத்தில் இருபுறமும் உள்வாங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் தினசரி இந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.



Tags : Wickravandi-Kumbakonam road , Villupuram: Wickravandi - Kumbakonam National Highway works have been put on hold. High level to be built on these roads
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...