அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் பன்னீர்செல்வம்: அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரை: ஓ.பன்னீர்செல்வத்தின் பயணம் வெற்றிபெறாது என்று அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அதிமுகவில் சர்ச்சைகள் ஓயவில்லை. இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தேர்தலில் தனது தொகுதியில் மட்டுமே பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்; யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை என ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டினார்.

தென் மாவட்டத்துக்கு பன்னீர்செல்வம் எதுவும் செய்யவில்லை, செல்வாக்கு இருப்பதுபோல் மாயை உருவாக்குகிறார். அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் பன்னீர்செல்வம் எனவும் கடுமையாக சாடினார். இதனிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தலைமை அலுவலக பேனரில் இருந்த ஓபிஎஸ்சின் படத்தை தொண்டர்கள் கிழித்தனர். அனைவரும் ஒற்றை தலைமையை விரும்பும் நிலையில் அதற்கு ஆதரவு தராமல் நீதிமன்றத்திற்கு செல்வதால் தொண்டர்களுக்கு தான் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: