செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் : ஒன்றிய அரசுக்கு கோரிக்கை

டெல்லி :  செயல்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தி உள்ளார். மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட நாட்டின் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின்படி தேர்தல் ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் பதிவு செய்யும் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை உள்ளிட்ட சில சலுகைகள் கிடைக்கும். இதற்காக பலர் பெயருக்கு ஒரு கட்சியை பதிவு செய்து சலுகைகளை பெற்று வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. தேர்தலில் போட்டியிடாமல் சலுகைகளை மட்டுமே பெறும் இத்தகைய கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.  

இதனிடையே போலியான முகவரியில் இயங்கி வந்த 198 அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அண்மையில் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மற்றும் மோசடியில் ஈடுபட்ட சில கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கு தேர்தல்  ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு அங்கீகாரம் உள்ளதை போல குறிப்பிட்ட சில காரணங்களின் போது அந்த கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் முழு அதிகாரத்தையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு மத்திய சட்டத்துறை செயலரை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்த விவகாரத்தில் மத்திய அரசு இனியும் கால தாமதம் செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை ரத்து செய்வது சிக்கலான விஷயம் என்பதால் இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்து விவகாரங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்த பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் பொறுமை காக்குமாறு தேர்தல் ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: