×

புழல் சிறை காவலர் குடியிருப்பில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி: சுற்றுப்பகுதி மக்கள் பாதிப்பு

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால், சுற்றுப் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்ககப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில், காவலர்களுக்கான குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டி, நிரம்பி வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் கன்னடபாளையம் வஉசி தெருவில் உள்ள மழைநீர் கால்வாயில் கலப்பதால், கால்வாய் தெரியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மேலும், இந்த கழிவுநீர் புழல் கன்னடபாளையம் திருவிக தெரு மற்றும் குறுக்கு தெருக்களிலும் தேங்குவதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் கழிநீரை கடந்து சென்று சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புழல் சிறைச்சாலை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாயில் கலப்பதால் கொசு உற்பத்தியாகி சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனிடையே மழை பெய்தால் இந்த கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, புழல் மத்திய சிறைச்சாலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை நிரந்தரமாக தடுத்து நிறுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Punjab Prison Guard , Injury to the prison guard residence, septic tank, surrounding people
× RELATED புழல் சிறை காவலர் குடியிருப்பில்...