×

சென்னை உயர் நீதிமன்ற ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் கதவு திடீரென மூடியதால் 3 பயணிகள் காயம்: பயணிகள் திடீர் தர்ணா

தண்டையார்பேட்டை: சென்னை உயர் நீதிமன்ற ரயில் நிலையத்தில், மெட்ரோ ரயில் கதவு திடீரென மூடியதால் 3 பயணிகள் காயமடைந்தனர். இதுபற்றி முறையிட்டும் அதிகாரிகள் சரிவர பதிலளிக்காததை கண்டித்து சக பயணிகள் ரயில் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை  உயர் நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தில்  இருந்து புதுவண்ணாரப்பேட்டை செல்ல  நேற்று முன்தினம் இரவு  குழந்தையுடன் பிரியா என்ற பெண், அவரது தம்பி  மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த ரெகேனா என்ற பெண் ஆகிய 3 பேரும் மெட்ரோ ரயிலில் ஏறியுள்ளனர். அப்போது, திடீரென ரயில் பெட்டியின் கதவு தானாக மூடியதில், 3 பேரும் கதவில் சிக்கி, கைகளில் காயம்  ஏற்பட்டது.

இதை பார்த்த சக பயணிகள் அவர்கள் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.  இதன்பின்னர் புதுவண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்ததும், இதுகுறித்து  ரயில் டிரைவரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும்,  மெட்ரோ ரயில்நிலைய அதிகாரிகளும் பயணிகளின் முறையீட்டை  அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில்  அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, ரயில் நிலையத்தில் 10க்கும்  மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்ட 3 பேருடன் திடீரென தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவ்வழியே ரோந்து பணியில்  இருந்த கொளத்தூர் போலீஸ் துணை ஆணையர் ராஜாராம் தகவலறிந்ததும் விரைந்து  வந்தார். அங்கு தர்ணாவில் ஈடுபட்ட பயணிகளிடம்  சமரச  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில்  பாதிக்கப்பட்ட ரெகானா என்ற பெண் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Metro ,Chennai High Court , Chennai High Court Railway Station, Metro Rail, Passenger Injury,`
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...