மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக திறக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய  சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம்  வழங்கிய கோரிக்கைகள்:

தமிழ்நாடு சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட்டுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2022 பிப்ரவரியில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான 50 மாணவர்கள் சேர்க்கைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிக இடம் கொடுத்து தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோயம்புத்தூரில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்கு முறை விதிமுறைகள், முதுநிலை மருத்துவக் கல்வியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதில் மாநிலங்களின் பங்கினை குறைக்கும் விதிகள் நீக்கப்பட வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம். 50 துணை சுகாதார நிலையங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களாகவும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Related Stories: