திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து புகாரை இலவச எண்ணிலோ அல்லது வாட்ஸ்அப் எண்ணிலோ தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூரில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தெரிவித்தனர். தமிழக ஆந்திர எல்லையோர மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாகவும், கும்மிடிப்பூண்டி வழியாகவும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில், நேற்று சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் காவல் துறை இயக்குனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் எஸ்பி ரோஹித்நாதன் ஆகியோரது உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் சரக நுண்ணறிவிப்புரிவு காவல்துறை சார்பில் மீரா திரையரங்கம் அருகில் இருந்து சாரண சாரணிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது என்றும் அதனை விற்பனை செய்பவர்கள் குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

அதனைத் தொடர்ந்து கஞ்சா போன்ற போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. நகரின் முக்கிய சாலையில் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் பொது மக்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இதில் காஞ்சிபுரம் சரக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு டிஎஸ்பி டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் வசந்தி, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, இரயில்வே இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் 18581 மற்றும் வாட்ஸ்அப்பில் 9498410581 என்ற எண்ணிலும் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், புகார்தாரர் குறித்த ரகசியம் காக்கப்படும் எனவும் காஞ்சிபுரம் சரக நுண்ணறிவுப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: