ஆவடி காவல் ஆணையரகத்தில் காவலர் உணவுப்படி 3 மாதமாக நிலுவை

ஆவடி: கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக தனியே தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு உணவுப்படி வழங்கப்படவில்லை. எனினும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மட்டும் காவலர்களுக்கு மாதந்தோறும் உணவுப் படி வழங்கப்படுகிறது. இதனால் மாத சம்பளம் வாங்கும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள், அதில் வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி கட்டணம், பேங்க் லோன் போன்றவற்றுக்கு செலவிடுகின்றனர்.

பின்னர், அன்றாட பணிகளின்போது உணவு சாப்பிட, கையில் பணமில்லாமல் தவித்து வருகின்றனர். இதனால் மாத சம்பளத்தில் கைவைத்தால், குடும்ப செலவுக்கு பணமின்றி கடன் வாங்க நேரிடுகிறது. இதில் பல்வேறு காவலர்களும் அதிகாரிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு 3 மாத உணவுப்படி நிலுவையை வழங்கவும், அதன்பிறகு மாதந்தோறும் உணவுப்படி வழங்க காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: