திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு முதியோர் உதவி தொகை உள்பட ரூ.2 கோடியில் நலத்திட்ட உதவிகள்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு முதல்கட்டமாக ரூ.2 கோடியே 12 லட்சத்து 6 ஆயிரத்து 644 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டா என 208 நபர்களுக்கும் முதியோர் உதவித் தொகை மற்றும் விதவை உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த 104 நபர்கள் என மொத்தம் 312 நபர்களுக்கு அதற்கான ஆணையினை வழங்கினார்.

பின்னர் எம்எல்ஏ பேசும்போது, `ஜமாபந்தியில் விண்ணப்பித்த அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, விதவை விதவைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இரவும், பகலும் அயராது உழைத்து உடனடியாக வழங்கிய திருவள்ளூர் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை மனதார பாராட்டுகிறேன்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், நகரமன்ற உறுப்பினர்கள் தாமஸ், அயூப்அலி, துணை வட்டாட்சியர்கள் சுந்தர், ஜெயஸ்ரீ, அருணா, சரஸ்வதி, வருவாய் ஆய்வாளர்கள் கணேஷ், சா.தினேஷ், டில்லிபாபு, சரவணன், விஷ்ணுபிரியா, கவிதா, விவிதா, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் எல்.கிருஷ்ணன், அமைப்பு செயலாளர் டி.விஸ்வநாத், வட்ட தலைவர் எம்.குமரன், செயலாளர் பரணிதரன், பொருளாளர் குமரேசன், த.சுகுமார், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் என்.சீனிவாசன், செயலாளர் பி.சசிகுமார், பொருளாளர் சுப்பிரமணியன், துணைச்செயலாளர் ஏ.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: