திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபாதையில் குவித்து வைத்துள்ள கற்களால் பாதசாரிகளுக்கு இடையூறு: அகற்ற வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபாதையில் குவித்து வைத்துள்ள கற்களால் பாதசாரிகளுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அவற்றை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஏராளமான பணிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இந்த நிலையில், இந்த ரயில் நிலையம் அருகே சாலையோர நடைபாதையில் ஏராளமான கருங்கல் சிலாப்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் நடைபாதை அமைக்க, இந்த சிலாப்கள் இங்கே கொண்டு வந்து வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடைபாதை அமைக்காமல் மெட்ரோ ரயில் நிர்வாகம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அவ்வப்போது சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் முறையிட்டபோது, தேரடி ரயில் நிலையத்தில் திட்டப் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும், நடைபாதையை மாநகராட்சி தான் அமைக்க வேண்டும் என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால், மெட்ரோ ரயில் அதிகாரிகள் நடைபாதை அமைப்பதற்காக கொண்டு வந்து வைத்த ஸ்லாப்புகளை அப்புறப்படுத்தினால் தான் நடைபாதை அமைக்க முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகளும் கூறியுள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி, மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த இடத்தில் நடைபாதை அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: