×

ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி கொள்ளை: கொல்கத்தா வாலிபர் 2 பேர் கைது

சென்னை: ஆன்லைன் மூலம் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி வங்கி கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி கொள்ளையடித்த கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே பட்டரவாக்கத்தில் கார், பைக், லாரிகளுக்கான உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த கம்பெனி மேலாளராக சுரேஷ் (39) இருந்து வருகிறார். கடந்த 11ம் தேதி கம்பெனியின் வங்கி கணக்கை சரிபார்த்துள்ளனர். அப்போது ரூ.1 கோடியே 10 லட்சம் மாயமானது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தனியார் கம்பெனி உரிமையாளர், கம்பெனி மேலாளரிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கம்பெனி மேலாளர் சுரேஷ் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின்பேரில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆய்வாளர் திருவள்ளுவர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணயை தொடங்கினர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரித்தபோது கொல்கத்தாவில் இருந்து ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் ராமசாமி, திருவள்ளுவர் கொல்கத்தா விரைந்தனர். அங்கு முகாமிட்டு ஆன்லைன் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆன்லைன் கொள்ளையில் ஈடுபட்ட கொல்கத்தாவை சேர்ந்த சபீர் அலி (38), கிருஷ்ணகுமார் பிரசாத் (31) ஆகியோரை நேற்று முன்தினம் சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர்.

 பின்னர் இருவரையும் சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தபோது ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது வங்கி கணக்கில் இருந்த ரூ.28 லட்சத்தை முடக்கினர். இவர்கள் வேறு எந்தெந்த தொழிற்சாலைகளின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை கொள்ளையடித்தார்கள் என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பத்தூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kolkata , 1.10 crore robbery in private company bank account online: 2 Kolkata youths arrested
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...