முன்விரோத தகராறில் பிரபல ரவுடியின் கூட்டாளியை கொல்ல முயற்சி: 3 பேர் கைது

செங்கல்பட்டு: முன்விரோதம் தகராறு காரணமாக, பிரபல ரவுடியின் கூட்டாளியை கொல்ல முயற்சி செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு அருகே பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் வைகோ (எ) சந்துரு. இவரது தம்பி சூர்யா. இருவரும் பிரபல ரவுடிகள். காவனூர் பகுதியை சேர்ந்த பூச்சி (எ) ரத்தினசபாபதி. இவரும் பிரபல ரவுடி. இவரது கூட்டாளி பிரவீன்குமார். இவர்களிடையே, முன்விரோதம் காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பிரவீன்குமார் நேற்று முன்தினம் இரவு திருக்கச்சூர் அரசு உயர்நிலை பள்ளி பின்புறம் தனியே நிற்பதாக, சந்துரு கோஷ்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து, சந்துரு கோஷ்டியை சேர்ந்த கூட்டாளிகள் கிஷோர்குமார், சிவகுமார், நவீன்குமார் ஆகிய 3 பேரும் விரைந்து சென்றனர். பின்னர், அங்கு தனியே நின்றிருந்த பிரவீன்குமாரை அவர்கள் சுற்றி வளைத்து, பட்டாக்கத்தியால் தலையில் சரமாரி வெட்டி கொலை செய்ய முயற்சித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அலறியவாறு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைப்பார்த்த, சந்துருவின் 3 கூட்டாளிகளும் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து, மறைமலைநகர் போலீசில் பிரவீன்குமார் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில், போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சந்துருவின் கூட்டாளிகள் கிஷோர்குமார், சிவகுமார், நவீன்குமார் ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Related Stories: