×

உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவென்யூவில் 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடை: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் முத்துகிருஷ்ணா அவென்யூவில், கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடையை, மக்கள் பயன்பட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சியில் 8 மற்றும் 11வது வார்டுகளுக்குட்பட்ட முத்துகிருஷ்ணா அவென்யூ, கெங்கையம்மன் கோயில் தெரு, கீழாண்டை கொள்ளை மேட்டு தெரு, டான்ஸ்பேட்டை தெரு, மேலாண்டை கொள்ளை மேட்டு தெரு, செங்குந்தபிள்ளையார் கோயில் தெரு, வெள்ளைச்செட்டி தெரு, கிண்டி வெங்கடசாமி நாயுடு தெரு, கீழ்வெங்கடாசாரி தெரு, கண்ணதாசன் தெரு, காமராஜர் தெரு உள்பட 10க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் கீழ்வெங்கடாசாரி தெரு மற்றும் பாவோடு தோப்பு தெருகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதில், முத்துக்கிருஷ்ணா அவென்யூ, டான்ஸ் பேட்டைத் தெரு, கீழாண்டை கொள்ளை மேட்டு தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் 450க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேவையாக ரேஷன் பொருட்களை கீழ்வெங்கடாசாரி தெரு மற்றும் பாவோடு தோப்பு தெருகளில் உள்ள ரேஷன் கடைகளில் சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால், தங்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை சுமந்து கொண்டு 4 தெருக்கள் வழியே செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனால், தங்கள் பகுதிக்கு என புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், கடந்த 2012ல் ரூ.5 லட்சம் மதிப்பில் முத்துகிருஷ்ணா அவென்யூ பகுதியில் புதியதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் ஆன போதிலும் இந்த ரேஷன் கடை இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமலேயே உள்ளது. இதனால், ரேஷன் கடை இருந்தும் அப்பகுதி மக்கள் வெகுதூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ரேஷன் கடைக்காக கட்டப்பட்ட கட்டிடமானது மூடியே உள்ளதால் கட்டிடம் பழுதாவதுடன் மாலை நேரங்களில் சமூக விரோதிகள் பல்வேறு அசாம்பாவித செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த ரேஷன் கடையினை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Muthukrishna Avenue ,Uttiramerur , Ration shop on Muthukrishna Avenue in Uttiramerur not in use for 10 years: Public demand for action
× RELATED உத்திரமேரூர் அருகே ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு