பார்த்திபன் நடித்த படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது

சென்னை: பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், ‘இரவின் நிழல்’. வரலட்சுமி, ரோபோ சங்கர், பிரியங்கா ருத் உள்பட பலர் நடித்துள்ள இப்படம், வரும் ஜூலை 15ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து பார்த்திபன் அளித்த பேட்டி: என் காலத்துக்கு பிறகு எனது 5 படங்களாவது சினிமாவில் முக்கிய படமாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நிறைய படங்களில் நடிக்கிறேன். நிறைய சம்பளம் வாங்குகிறேன். நல்ல வாழ்க்கைக்கு இது போதுமானது. ஆனால், நான் சினிமாவில் சம்பாதிக்க விரும்பவில்லை, சாதிக்கவே விரும்புகிறேன். ‘ஒத்தசெருப்பு சைஸ் 7’ படத்தில் நான் மட்டும் நடித்தேன். தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்தது. இதே படத்தை அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறேன். அடுத்து இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது.

இப்படம் எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தது. எனவே, இதுவும் ஒரு கமர்ஷியல் படம்தான். வரும் ஜூலை 15ம் தேதி ‘இரவின் நிழல்’ படம் திரைக்கு வருகிறது. இது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படம். 6 பாடல்கள் இடம்பெறுகிறது. சண்டைக் காட்சிகள் இருக்கிறது. இரவு, பகல், மழை, வெயில் என்று படத்தில் மாறி மாறி வரும். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ஒரு மனிதனின் முழுமையான வாழ்க்கையை சொல்லும் கதை கொண்ட இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இரவின் நிழல்’ திரையிடப்பட்டபோது, பல ஹாலிவுட் கலைஞர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இப்படமும் ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது.

Related Stories: