கங்கனாவுடன் மீண்டும் இணைந்தார் ஜி.வி.பிரகாஷ்

மும்பை: அரசியல், சினிமா மற்றும் பொது விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளி யிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வரும் நடிகையும், தயாரிப்பாளருமான கங்கனா ரனவத் இயக்கி நடிக்கும் புதிய படத்துக்கு இசை அமைக்கிறார், ஜி.வி.பிரகாஷ் குமார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனவத், தமிழில் ‘தாம் தூம்’, ‘தலைவி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘தக்கட்’ படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், திரையுலகில் இழந்த தனது மார்க்கெட்டை மீட்டெடுப்பதற்கு புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்கவுள்ள அவர், மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, ‘எமர்ஜென்சி’ என்ற பெயரில் பான் இந்தியா படத்தை உருவாக்குகிறார். இதில் அவர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு இசை அமைக்க ஒப்பந்தமாகியுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ‘நடிகை கங்கனாவை சந்தித்தது குறித்து அதிக மகிழ்ச்சி. அவரது கனவுப் படத்தில் பணிபுரிய ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்றார். ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், நடி கையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான ‘தலைவி’ படத்தில், ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். அப்படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து இருந்தார். தற்போது ‘எமர்ஜென்சி’ படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர்.

Related Stories: