நீர்வளத்துறையில் 2,823 பணியிடத்துக்கு அனுமதி: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நீர்வளத்துறையில் 2823 தற்காலிக பணியிடங்களுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் நீர்வளத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை கண்காணிக்க மண்டல தலைமை பொறியாளர் தலைமையில் கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக நீர்வள பிரிவில் நடைபெறும் திட்ட பணிகளை களத்தில் நின்று பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், பணி ஆய்வாளர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

ஆனால், தற்போது அந்த பணியிடங்கள் பெரும்பாலானவை காலியாக உள்ளது. குறிப்பாக, இளநிலை பொறியாளர் பணியிடங்களும், உதவி பொறியாளர் பணியிடங்களும், 1000க்கும் மேற்பட்ட பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்து அதன் மூலம் திட்டம் மற்றும் அலுவலக பணிகளை கண்காணித்து வருகின்றனர். இதற்காக, 4560 பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் 2633 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பணிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு தற்காலிக நியமன அடிப்படையில் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தற்காலிக பணியிடங்கள் மறுவரையறை செய்ய வேண்டும் என்பதால், இது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசு நீர்வளத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம், காலி பணியிடங்களின் அடிப்படையில்கூடுதல் பணியிடங்களை பெற நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2,538 பணியிடங்களுக்கு பதிலாக 2823 பணியிடங்களுக்கு அனுமதி அளித்து அரசு செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த பணியிடங்கள் வரை ஜனவரி 2022ம் தேதி முதல் டிசம்பர் 2023 வரை ஊழியர்களை பணி அமர்த்தி கொள்ளலாம் என்று நீர்வளத்துறைக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, நீர்வளத் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நீர்வளத் துறையின் பல்வேறு பிரிவுகளில் 4560 தற்காலிக பணியிடங்களை மேலும் தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 1.1.2013 முதல் 31.12.2015 வரையிலான காலகட்டத்தில் இப்பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. 1.1.2016 முதல் 31.12.2018 வரையிலான காலகட்டத்தில் 3129 எண்ணிக்கையிலான தற்காலிகப் பணியிடங்களை மேலும் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. 1.1.2019 முதல் 31.12.2021 வரையிலான காலகட்டத்தில் 2538 தற்காலிக பணியிடங்களை தொடர அனுமதி வழங்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்த 285 பணியிடங்கள் கூடுதலாக காலியாக உள்ளது. எனவே அனைத்து மறுபகிர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, 2823 தற்காலிக பணியிடங்களை தலைமை பொறியாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 1.1.2022 முதல் 31.12.2024 வரையிலான மூன்று ஆண்டுகள், 31.12.2021 வரை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட 159 தற்காலிக பணியிடங்கள் மற்றும் 30.9.2023 வரை 2823 தற்காலிகப் பணியிடங்களை மூன்றாண்டு காலத்திற்கு தொடர்ந்து தொடர்வதற்கான அரசாணைகளை கோரியுள்ளார்.

2022 முதல் 31.12.2024 மற்றும் 31.12.2021 வரை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட தற்காலிக பணியிடங்கள் மற்றும் 30.9.2023 வரை தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்பட, 2823 பல்வேறு தற்காலிகப் பணியிடங்களை தொடர ஒப்புதல் கோரியது. அதன்படி இந்த பணியிடங்கள் 1.1.2022 முதல் 31.12.2023 வரையிலான ஆணையிடப்படுகிறது. இந்த உத்தரவில் அனுமதிக்கப்பட்ட / மேலும் தொடரும் பதவிகளில் இருப்பவர்கள், அமலில் உள்ள உத்தரவுகளின்படி ஊதியம் தவிர, அகவிலைப்படி மற்றும் பிற வழக்கமான கொடுப்பனவுகளை பெற தகுதியுடையவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: