ரஞ்சி கோப்பை கிரிக்கெட் ம.பி. முதல் முறையாக சாம்பியன்: பைனலில் மும்பையை வீழ்த்தியது

பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மத்திய பிரதேச அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் பிரித்வி ஷா 47, ஜெய்ஸ்வால் 78, சர்பராஸ் கான் 134 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 536 ரன் குவித்தது. யஷ் துபே 133, ஷுபம் ஷர்மா 116, ரஜத் பத்திதார் 122, சரன்ஷ் ஜெயின் 57 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 162 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்திருந்தது. அர்மான் ஜாபர் 30, சுவேத் பார்கர் 9 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

ஜாபர் 37, சுவேத் 51, சர்பராஸ் 45 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். முலானி, தேஷ்பாண்டே ரன் அவுட்டானது மும்பை அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அந்த அணி 57.3 ஓவரில் 269 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ம.பி. பந்துவீச்சில் குமார் கார்த்திகேயா 4, கவுரவ் யாதவ், பார்த் சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 108 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மத்திய பிரதேசம், 29.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஹிமான்ஷு 37, யஷ் துபே 1, ஷுபம் ஷர்மா 30, பார்த் சஹானி 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். ரஜத் பத்திதார் 30, கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ம.பி. அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்டு சாதனை படைக்க, 41 முறை சாம்பியனான மும்பை அணி இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தது. ம.பி. வீரர் ஷுபம் ஷர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையின் சர்பராஸ் கான் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். இந்த ரஞ்சி சீசனில் சர்பராஸ் 6 போட்டியில் (9 இன்னிங்ஸ்) 982 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது (அதிகம் 275, சராசரி 122.75, சதம் 4, அரை சதம் 2).

* விட்டதை பிடித்த சந்திரகாந்த் பண்டிட்!

மத்திய பிரதேச அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் (60 வயது). இவரது தலைமையிலான ம.பி.அணி 1998 -1999 ரஞ்சி சீசனில் பைனலுக்கு முன்னேறி இருந்தது. அப்போது பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியிடம் தோற்று 2வது இடம் பிடித்தது. கடுமையாகப் போராடியும் ரஞ்சி கோப்பையை முத்தமிட முடியாமல் போனதால், கேப்டன் சந்திரகாந்த் பண்டிட் களத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பிரதேச அணியின் தலைமை பயிற்சியாளராக நேற்று அவர் அதே சின்னசாமி ஸ்டேடியத்தில் ரஞ்சி கோப்பையை முத்தமிட்டு தனது கனவை நனவாக்கிக் கொண்டார். ம.பி. அணிக்காக அவர் கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் இவரது பயிற்சியின் கீழ் செயல்பட்ட அணிகள் 4 முறை ரஞ்சி சாம்பியனாகி உள்ளன என்பது ஆச்சரியமான உண்மை. 2015-16 சீசனில் மும்பை அணியும், 2017-18, 2018-19 சீசன்களில் விதர்பா அணியும் இவரது பயிற்சியின் கீழ் ரஞ்சி கோப்பையை வசப்படுத்தின. 2020 மார்ச் மாதம் ம.பி. அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற சந்திரகாந்த் தற்போது மீண்டும் சாதித்து காட்டியிருக்கிறார்.

Related Stories: