×

சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பரவல், புதிய தொழில்களுக்கு அனுமதி, மேகதாது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, மேகதாது அணை விவகாரம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, புதிய திட்டங்களுக்கான அனுமதி, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துதல், புதிய கொள்கைகள், தமிழகம் முழுவதும் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ள தடுப்பு பணிகள், மீட்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து விரைவுபடுத்தவும் அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவார் என தெரிகிறது. மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்ட மசோதா சீர்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதேபோல், ஜூலை 28ம் தேதி (நாளை) முதல் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிக்கான முன்னேற்பாடுகள், தொடக்க விழா மற்றும் நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chief Minister ,Chennai General Secretariat , Chennai General Secretariat, Cabinet meeting chaired by the Chief Minister, Consultation on important issues
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...