×

ஜெர்மனியில் பிரதமர் மோடி பேச்சு ஒவ்வொரு இந்தியன் மரபணுவிலும் ஜனநாயகம்: ஜி-7 மாநாட்டில் பங்கேற்பு

முனிச்: ‘ஜனநாயகத்தின் தாய் இந்தியா என ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு இந்தியனின் மரபணுவிலும் ஜனநாயகம் உள்ளது,’ என ஜி-7 மாநாட்டின் இடையே ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய 7 நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கி உள்ளன. இதன் 48வது 2 நாள் உச்சி மாநாடு ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

நேற்று காலை முனிச் விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளிகள் பலர் உற்சாகமாக பிரதமர் மோடியை வரவேற்றனர். குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் அவரிடம் ஆட்டோகிராப் பெற்றனர். குழந்தைகளுடனும், இந்தியர்களுடனும் மோடி சிறிது நேரம் பேசினார். அதைத் தொடர்ந்து, முனிச்சில் உள்ள ஆடி டோம் உள்ளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் அவர், இந்திய வம்சாவளிகள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் நினைவு தினத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஜனநாயகத்தை பணயக் கைதியாக வைத்து நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்திற்கு கரும்புள்ளியாக மாறியது. ஆனாலும், எந்த சமயத்திலும் ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. ஒவ்வொரு இந்தியனின் மரபணுவிலும் ஜனநாயகம் வேரூன்றி உள்ளது. இந்தியர்களாகிய நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது ஜனநாயகத்தைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமையுடன் கூற முடியும். கலாசாரம், உணவு, உடைகள், இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது.
கடந்த நூற்றாண்டில், ஜெர்மனியும் பிற நாடுகளும் தொழில் புரட்சி மூலம் பலன் அடைந்தன.

அப்போது இந்தியா அடிமைப்பட்டு இருந்ததால் பலன்களைப் பெற முடியவில்லை. ஆனால், இப்போது 4வது தொழில் புரட்சியில் இந்தியா பின் தங்காது, இப்போது உலகை வழிநடத்தும் சக்தியாக இந்தியா உள்ளது.  ஒரு காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களே இந்தியாவில் இல்லாத நிலை இருந்தது. இன்று, நாங்கள் உலகளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மையமாக இருக்கிறோம். அதேபோல், சாதாரண போன்களை கூட இறக்குமதி செய்து வந்தோம், இன்று உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக இருக்கிறோம்.

பருவநிலை மாற்றம் என்பது இந்தியாவின் கொள்கை மட்டுமல்ல, இந்திய மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளை உருவாக்கி உள்ளோம். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமையை என இப்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 99% கிராமங்களில் சுத்தமான சமையல் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பதற்கான இலக்கை 5 மாதங்கள் முன்கூட்டியே எட்டி உள்ளோம். இந்தியா இப்போது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியா தனது கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட 10-15 ஆண்டுகள் ஆகும் என்று பலரும் கருத்து கூறினார்கள். ஆனால், இன்று, 90% பேருக்கு 2 டோஸ்களையும், 95% பேருக்கு குறைந்தது ஒரு டோசும் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால் உலகில் பல உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன என்றார்.

எதிர்கால சந்ததிகளும் மறந்து விடக்கூடாது
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று, அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து, அவரது பதிவு செய்யப்பட்ட உரை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று ஒலிபரப்பப்பட்டது. அதில்,இந்தியாவில் கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அவசரநிலை அமல்படுத்தப்பட்டு, 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வாபஸ் பெறப்பட்டதன் நினைவு தினம் குறித்து மோடி பேசுகையில், ‘அவசரநிலை அமல்படுத்திய போது, அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அதில், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உயிருக்கும், தனிமனித சுதந்திரத்திற்குமான பாதுகாப்பும் அடங்கும்.

அந்த நேரத்தில், இந்தியாவில் ஜனநாயகம், நாட்டின் நீதிமன்றங்கள், ஒவ்வொரு அரசியலமைப்பு நிறுவனங்களையும் நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் பல நூற்றாண்டுகளாக நம்மில் வேரூன்றி, நாடி நரம்புகளில் பாய்ந்தோடும் ஜனநாயக உணர்வே வெற்றி பெற்றது. ஜனநாயக முறையில் இந்திய மக்கள் அவசரநிலையை அகற்றி, ஜனநாயகத்தை மீட்டெடுத்தனர். இன்று, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, அவசரநிலையின் இருண்ட காலத்தை நாம் மறந்து விடக்கூடாது. எதிர்கால சந்ததிகளும் அதனை மறந்து விடக் கூடாது’ என்றார்.

Tags : Modi ,Germany ,G-7 , Germany, Prime Minister Modi Speech, Democracy in the Indian Genome, G-7 Conference,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...