எடப்பாடி அணி ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தயாராகும் நிலையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு

சென்னை: எடப்பாடி பழனிசாமி அணி வரும் ஜூலை 11ம் தேதி ெபாதுக்குழுவை கூட்ட தயாராகி வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் ெசய்து நிர்வாகிகள், தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். இந்நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 23ம் தேதி நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சென்னையில் கடந்த 14ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிமுகவை முன்பு போல விறுவிறுப்பாக செயல்பட வைக்க ஒற்றை தலைமை (பொது செயலாளர்) முறையே சிறந்தது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவில் பிரச்னை வெடித்தது. இருதரப்பினரும், தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். இதில் எடப்பாடிக்கு 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் ஆதரவு இருந்தது.

இதனிடைேய இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டுமென இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி மறுத்ததுடன் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். இந்த கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து அதிமுக பொதுக்குழு நடத்தலாம், ஆனால் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கக்கூடாது.

23 தீர்மானங்களை தவிர்த்து வேறு புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து வானகரம் திருமண மண்டபத்தில் 23ம் தேதி காலை நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், கட்சியின் அவைத் தலைவராக தமிழ மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய பலர், அதிமுகவில் ஒற்றை தலைமை தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றனர். இப்படி எடப்பாடி அணியினர், தன்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில் நடந்து கொண்டதால், ெபாதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மீண்டும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர்.  இந்நிலையில், 23ம் தேதி இரவே ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது பாஜ கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் 24ம் தேதி நடந்த பாஜ கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்ததும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க இருவரும் நேரம் ஒதுக்கவில்லை.

இதனால் ஏமாற்றத்துடன் நேற்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை, வந்ததுடன் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை எப்படி சமாளிப்பது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து அதிமுகவில் ஆதரவாளர்களை திரட்ட, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவளிக்குமாறும், ஒற்றை தலைமைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுப்பார் என்று கூறப்படுகிறது.  விரைவில் அவரது சுற்றுப்பயணம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதால் இதை எப்படி சமாளிப்பது என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: