புதுவண்ணாரப்பேட்டையில் மெட்ரோ ரயில் கதவு மூடியதால் 3 பேர் காயம்; பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: சென்னை உயர்நீதிமன்றம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு புதுவண்ணாரப்பேட்டை செல்ல குழந்தையுடன் பிரியா என்ற பெண், அவரது தம்பி மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த ரெகேனா என்ற பெண் ஆகிய 3 பேரும் ஏறியுள்ளனர். அப்போது கதவு தானாக மூடியதில் 3 பேருக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. அவர்களை ரயிலில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்டனர். இதன்பின்னர் புதுவண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்ததும், இதுகுறித்து ரயில் டிரைவரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது.

மேலும் மெட்ரோ ரயில்நிலைய அதிகாரிகளும் பயணிகளின் முறையீட்டை அலட்சியப்படுத்தியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, ரயில் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்ட 3 பேருடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவ்வழியே ரோந்து பணியில் இருந்த கொளத்தூர் போலீஸ் துணை ஆணையர் ராஜாராம் தகவலறிந்ததும் விரைந்து வந்தார். அங்கு தர்ணாவில் ஈடுபட்ட பயணிகளிடம் துணை ஆணையர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காயமடைந்த 3 பேரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்துபுதுவண்ணாரப்பேட்டை போலீசில் பாதிக்கப்பட்ட ரெகானா என்ற பெண் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: