விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் காசிப்பிள்ளை(27). இவரது மனைவி சாந்தகுமாரி (23). மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்து வெளியே வந்தபோது  இடுப்பில் குண்டு பாய்ந்து சாந்தகுமாரி மயங்கிக் கீழே விழுந்துள்ளார். இச்சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது கணவர் மயங்கிக் கீழே கிடந்த சாந்தகுமாரியை எழுப்பி பார்த்தபோது, இடுப்பில் குண்டு பாய்ந்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து வந்து, குண்டு பாய்ந்து காயமடைந்த சாந்தகுமாரியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்த போது, அப்பகுதியில் மான், மயில், முயல்கள், காட்டுப் பன்றிகள் என அதிக அளவில் காட்டு விலங்குகள் இருப்பதும், அதனை வேட்டையாடுவதற்கு, அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் தினமும் இரவில் அங்கு வந்து செல்வதும் தெரியவந்தது.

அதன்படி நேற்று இரவு வேட்டையாட வந்த மர்ம நபர்கள் நாட்டு துப்பாக்கியால் விலங்குகளை சுட்ட போது, சாந்தகுமாரி மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் வேட்டையாடும் மர்ம நபர்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: