அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!

சென்னை: அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் நிலவும் நிலையில் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள வி.கே.சசிகலா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி; தற்போது இந்த பயணம் தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கான பயணம் என்றும், அதிமுகவில் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவதே நோக்கம் என்றும் தெரிவித்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் ஒற்றைத் தலைமை சின்னம்மா என்று முழக்கங்களை எழுப்பினர். பிரச்சார வாகனத்தில் புறப்பட்ட சசிகலாவை வரவேற்று ஏராளமான தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பயணத்தை தொடங்கி வைத்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உச்சகட்ட மோதல் நிலவுகிறது. இந்நிலையில் அதிமுகவில் தொண்டர்களை ஒருங்கிணைக்க உள்ளதாக கூறி சசிகலா அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

முதல்முறையாக அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அவர் முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: