தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்

நாகர்கோவில்: கொல்லம் - கன்னியாகுமரி மெமூ, நாகர்கோவில் - கொச்சுவேளி உள்ளிட்ட ரயில்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்குகிறது. ரயில் எண் 06429/06430 கொச்சுவேளி-நாகர்கோவில்- கொச்சுவேளி முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வரும் ஜூலை 11 ம் தேதி முதல் தினசரி இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

இதில் ரயில் எண் 06429-கொச்சுவேளி-நாகர்கோவில் கொச்சுவேளியில் இருந்து பிற்பகல் 1.40க்கு புறப்பட்டு  மாலை 4.25க்கு நாகர்கோவில் சந்திப்பு வந்து சேரும்.ரயில் எண் 06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி சிறப்பு ரயில் காலை 7.55 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு காலை 10.10 மணிக்கு கொச்சுவேளி சென்றடையும்.

இந்த ரயில் நாகர்கோவில் டவுன், வீராணி ஆளூர் (ஹால்ட்), இரணியல், பள்ளியாடி (ஹால்ட்), குழித்துறை, குழித்துறை மேற்கு (ஹால்ட்), பாறசாலை, தனுவச்ச புரம், அமரவிளை, நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், நேமம், திருவனந்தபுரம் சென்ட்ரல், திருவனந்தபுரம் பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 இந்த ரயிலில் 10 பொது பெட்டிகள் உட்பட 12 பெட்டிகள் இடம்ெபறும். பராமரிப்பு பணிகள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும். இதனை போன்று கொல்லம்-கன்னியாகுமரி மெமூ, கன்னியாகுமரி - கொல்லம் மெமூ (66304/66305) மீண்டும் தினசரி இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஏற்கனவே வாரத்திற்கு 6 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. தற்போது ஏழு நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கு கால அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.

வரும் ஜூலை மாதத்திற்குள் அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்படும். அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் மட்டும் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: