பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெறும்; தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம்

தஞ்சாவூர்: பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம் புதுப் பொலிவுடன் பார்ப்பவர்களை ஈர்த்து வருகிறது. தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோடு சாலையில் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. கடந்த 1896ம் ஆண்டில் கட்டடப்பட்ட இக்கட்டடம் இந்தோ-சாராசனிக் கட்டட கலை பாணியைச் சார்ந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் தான் ஏறத்தாழ 120 ஆண்டுகள் கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இக்கட்டிடம்தான் தலைமையகமாக இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடநெருக்கடி, வாகனப்போக்குவரத்து அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த 2015ம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்த்து. இதையடுத்து, பழைய கலெக்டர் அலுவலகத்திலுள்ள அலுவலகங்கள் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

பழமை வாய்ந்த இக்கட்டிடத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த பழைய கலெக்டர் அலுவலக முதன்மைக் கட்டிடத்தை அருங்காட்சியமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, இக்கட்டிடத்தில் ஒவ்வொரு அறையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரியத்தை விளக்கம் வகையில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டன. வண்ண மீன்கள் கண்காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டது. இந்த வளாகத்தில் பிற்காலத்தில் எழுப்பப்பட்ட மற்ற கட்டிடங்களுக்கு வெளியே வாடகைக் கட்டிடத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு அலுவலகங்கள் மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட முதன்மைக் கட்டிடம் மட்டும் தொடர்ந்து அருங்காட்சியகமாகவே செயல்பட்டது.

இருப்பினும் இக்கட்டடம் சுற்றுலா பயணிகளைக் கவரவில்லை. இந்நிலையில் தஞ்சை மாநகரில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகமும் சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தில் பழைய கலெக்டர் அருங்காட்சியகத்தை பல கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 125 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில், அருங்காட்சியக பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வளாகத்தில் இன்னும் பல மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் போது இப்பகுதி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

பெரியகோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிவகங்கை பூங்காவுக்குச் செல்வது போல, இந்த வளாகத்துக்கும் வருவதற்கு வாய்ப்பாக அமையும்.

Related Stories: