புதர்மண்டி, விஷ ஜந்துக்கள் வசிப்பிடமானது மீண்டும் புத்துயிர் பெறுமா உழவர் சந்தை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அம்பத்தூர்: அம்பத்தூரில் புதர் மண்டி கிடக்கும் உழவர் சந்தையை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.உழவர்கள் தங்களின் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உழவர் சந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர். அதன்படி, தமிழகத்திலேயே கலைநயத்துடன் கட்டப்பட்டது அம்பத்தூர் உழவர் சந்தை. கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி இதை திறந்து வைத்தார்.இந்த உழவர் சந்தையை சுற்றி 15 கி.மீ. தொலைவுக்கு விவசாயம் கிடையாது. மேலும், சரியான போக்குவரத்து வசதியில்லாததால் கடந்த 17 ஆண்டுகளாக இந்த உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது. இதனால், இங்குள்ள எடை இயந்திரம், எடைக்கற்கள் அனைத்தும் துருப்பிடித்து வீணாகி உள்ளது.

இந்நிலையில் அண்மையில் வர்தா புயலின்போது, உழவர் சந்தையில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தது. அதை இன்று வரை அகற்றாமல் கிடக்கின்றன. உள்ளன. மேலும் மரங்கள் விழுந்ததால் அங்குள்ள கடைகளின் ஓடுகளும் சேதமடைந்துள்ளன. பல ஆண்டுகளாக பயன்பாடில்லாததால் தற்போது இந்த உழவர் சந்தை புதர்மண்டி காணப்படுகிறது.சமீபகாலமாக இங்கு ஏராளமான பாம்புகள் நடமாடுவதாகவும், இதனால் அருகிலுள்ள வேளாண் துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளதாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், ‘‘உழவர் சந்தை புதர்மண்டி உள்ளதால், அதை அகற்ற வேண்டும். இங்கு வளர்ந்துள்ள மரங்களை மதிப்பிட்டு, ஏலம் வாயிலாக மட்டுமே விற்பனை செய்ய முடியும். மேலும் பாம்பு பிரச்னைதான் தலையாய பிரச்னையாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, உழவர் சந்தையை புதுப்பித்து மீண்டும் செயல்படுத்த வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: