×

தாம்பரத்தில் 212 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு உள்ள வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: ஆர்டிஓ எச்சரிக்கை

சென்னை: தாம்பரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து, இயக்குவதற்கு தகுதியான வாகனங்கள் என சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கும் பணி, வண்டலூர் பூங்கா அருகில் உள்ள கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நேற்று நடந்தது. தாம்பரம் கோட்டாட்சியர், காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் பள்ளி வாகனங்களை இயக்கி, ஆய்வு செய்தனர்.

மொத்தம் 425 பள்ளி வாகனங்களில் முதற்கட்டமாக 212 பள்ளி வாகனங்களில் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 2012படி முதல் உதவி பெட்டி இருக்கின்றதா, அவசரத்திற்கு வெளியேறும் ஜன்னல் சரியாக வேலை செய்கின்றதா, பள்ளி வாகனம் என்பதற்கான அடையாளம் உள்ளதா, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா, தீ அணைக்கும் கருவி உள்ளதா, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா உள்பட 17 பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்று வழங்கப்பட்டது.ஆய்வின்போது ஒரு சில குறைபாடுகள் இருந்த 11 பள்ளி வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு, குறைபாடுகளை சரி செய்த பின்னர் ஒரு வார காலத்தில் மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல மீதமுள்ள 213 பள்ளி வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு செய்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குறைபாடுகளுடன் பள்ளி வாகனங்களை இயக்க கூடாது. அவ்வாறு இயக்கினால் வாகன உரிமம் ரத்து செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.




Tags : Tambaram , Inspection of 212 school vehicles in Tambaram Vehicles with defects Strict action if activated: RTO warning
× RELATED பாதாள சாக்கடை பணியின்போது மண் சரிவு:...