×

மாநில அரசு, குடும்ப ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை வீட்டில் இருந்தே சமர்ப்பிக்கலாம்: அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

சென்னை: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் கூறியதாவது:
மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தங்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கடந்த மே 31ம் தேதி கையெழுத்தானது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இருந்து ஓய்வூதியதாரர்களுக்கு மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமார் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரர்களிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.


Tags : State Government ,Postal Department Special Arrangement , State Government, Family Pensioners Digital Survival Certificate can be submitted from home: Post Office Special Arrangement
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...