பறிமுதல் செய்யப்பட்ட 2 கோடி போதைப்பொருட்கள் எரிப்பு: சென்னை போலீஸ் கமிஷனர் அதிரடி

சென்னை: சென்னையில் போதை பொருட்கள் வழக்குகளில்  கைப்பற்றப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சென்னை காவல் ஆணையர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.  போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட பொருட்களை வைப்பதற்கான இட வசதி கருதியும், வழக்கு தொடர்புடைய போதைப்பொருட்களை உரிய முறைப்படி அழிக்க குழுக்களை அமைக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டது.அதன்பேரில், சென்னை  காவல்துறைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி மற்றும் தடயவியல் துறை துணை இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் போதைப்பொருள் வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் (Samples), புகைப்படங்கள் (Photos) எடுக்கப்பட்ட பின்னர் நிலுவையிலுள்ள 13 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,026 கிலோ எடை கொண்ட கஞ்சா போதைப்பொருட்களை அழிக்க உத்தரவு பெறப்பட்டது. மேலும், போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த 55 வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு 274 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெராயின், பிரவுன்சுகர் ஆகியவற்றை அழிக்க உத்தரவு பெறப்பட்டு, மொத்தம் 68 வழக்குகளில் 1,300 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம், ஹெராயின், பிரவுன் சுகர் போதைப்பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து, நேற்று சென்னை  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நீதிமன்ற ஆணைகளின்படி உத்தரவுப்பெற்ற மொத்தம் 1,300 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 30 கிராம் ஹெராயின் பிரவுன்சுகர் ஆகிய போதைப்பொருட்களை செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆபத்தான ரசாயன பொருட்களை எரிக்கும் இடத்தில், சிறப்பு குழுவினர் மூலம் ஆய்வு செய்து எடை சரிபார்க்கப்பட்டு, 1,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: