முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குவதா?: பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: , சார் பதிவாளருக்கு எதிரான லஞ்ச புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஓர் ஆண்டாக பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி., தூங்கிக் கொண்டிருப்பதாக சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (70). இவருக்கு கோவை மாவட்டம் குமாரபாளையம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் அபகரித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குனருக்கு கடந்த ஆண்டு புகார் அனுப்பினார். புகாரில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அபகரித்துள்ளனர். இந்த மோசடிக்கு கோவை மாவட்ட பத்திரப்பதிவு பதிவாளர் சுரேஷ்குமார், சார் பதிவாளர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் துணைபோயுள்ளனர். போலி வாரிசு சான்றிதழை வாங்கி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல் நிலத்தை பதிவு செய்வதற்கான முத்திரைத்தாள் கட்டணத்தில் ₹4 லட்சம் குறைத்துள்ளனர் என்று கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் புகார் மீது நடவடிக்கை கோரி நாராயணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மோசடி கும்பல்நிலத்தின் மதிப்பை குறைவாக காட்டி அரசுக்கு சுமார் ₹4 லட்சத்தை இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.  மனுதாரரின் புகாரை பதிவுத்துறை ஐ.ஜி.க்கு, போலீசார் பரிந்துரை செய்து ஓர் ஆண்டாகி விட்டது. ஆனால், அந்த புகாரின் மீது பதிவுத்துறை ஐ.ஜி. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக அரசு வக்கீல் அவகாசம் கேட்கிறார். மாவட்ட பதிவுத்துறை பதிவாளர், சார் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் பதிவுத்துறை ஐ.ஜி. ஓர் ஆண்டுக்கு மேலாக தூங்கிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. இந்த வழக்கில் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: