×

தமிழகத்தில் இருந்து கடத்தல் கேரளாவில் 11 டன் ரசாயன மீன் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மீன் சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ரசாயனம் கலந்த கெட்டுப்போன மீன்கள் கொண்டு வரப்படுவது தெரியவந்தது. இதனால் கேரள மாநில எல்லைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கினர். நேற்று அதிகாலை தென்காசி மாவட்ட எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன் லாரிகளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து வந்த 3 லாரிகளில் அழுகிய மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாரிகளில் மொத்தம் 10 ஆயிரத்து 750 கிலோ (சுமார் 11 டன்) கெட்டுப்போன மீன்கள் இருந்தன. அந்த மீன்களில் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனம் கலக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மீன்களை அதிகாரிகள் கைப்பற்றி குழி தோண்டி புதைத்தனர். இவை கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் மொத்த மீன் சந்தைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Kerala , Abduction from Tamil Nadu 11 tons in Kerala Chemical fish extermination
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...