×

பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

நாகர்கோவில்: காற்று வேகமாக வீசி வருவதால், நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 3 வது நாளாக இன்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை  பயோ மைனிங் முறையில் அகற்றும் பணி  நடந்து வருகிறது. இங்கு மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற இன்னும் 2 வருட காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குப்பைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 2 முறை அடுத்தடுத்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த மாத தொடக்கத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது இரு மாதங்களில் 4 வது முறையாக நேற்று முன் தினம் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ  விபத்து ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

 நேற்று 2 வது நாளாகவும் தீயை அணைக்கும் பணிகள் நடந்தன. திங்கள்சந்தை, கன்னியாகுமரியில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று 3 வது நாளாக தீயை அணைக்கும் பணி நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுழற்சி முறையில் பல மணி நேரமாக போராடி தீயை அணைத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு முதல் காற்று வேகமாக வீசியதால், தீயின் தாக்கமும் அதிகரித்தது. மேலும் தீ அணைக்கப்பட்ட பகுதியில்  இருந்து மீண்டும் புகை கிளம்பி உள்ளது.

ெபாக்லைன் எந்திரம் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. காற்றின் காரணமாக  தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சாம்பல் அந்த பகுதி முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் மற்றும் ெபாதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. நேற்று காலை மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன்  ஆகியோர் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டனர். குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணியை தனியார் நிறுவனம் மேற்ெகாண்டு வருகிறது.

கூடுதல் பணியாளர்கள், இயந்திரங்கள் மூலம் அதி விரைவாக குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ள மாநகராட்சி மேயர் மகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Strong winds, right-wing garbage dump, firefighters struggle
× RELATED யானை தாக்கி விவசாயி பலி