வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் 7 இடங்களில் வேகத்தடை அமைப்பு

மேட்டுப்பாளையம்: வனவிலங்குகளின் பாதுகாப்பு மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில், 7 இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி நடுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வாகனங்களும் மேட்டுப்பாளையம் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் தினமும் கடந்து செல்கிறது.

சில சமயங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சில விபத்துகளில் வாகன ஓட்டிகளும் காயம் அடைந்து வருகின்றனர். பல இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தாலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே எச்சரிக்கை பலகை மட்டும் போதாது. கூடவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட ஆய்வு பிறகு வேகத்தடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் உள்ள செக்போஸ்ட் தொடங்கி முதல் கொண்டை ஊசி வளைவு வரை 7 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.பொதுவாக நெடுஞ்சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டு என்றால் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற வேண்டும். அதன்படி தற்போது முறையான அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் இந்த வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வாகனங்களும் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்களும் இந்த பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக பயணிக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories: