×

பளபள வைரம் பாதுகாப்பது எப்படி!

நன்றி குங்குமம் தோழி

தங்க நகை எவ்வளவு இருந்தாலும் சின்னக் கல் பதித்த வைர செட் ஒன்று இருக்க வேண்டும் என்பது இன்றைய தலைமுறையினரின் விருப்பமாக உள்ளது. பெண்கள் விரும்பும் வைர நகைகளை எவ்வாறு பராமரிக்கலாம்....

* எல்லா அலங்காரங்களும் முடிந்தபிறகே வைர நகைகளை அணிய வேண்டும்.

* தினசரி உபயோகத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும்போது அதைப் போட்டுக்கொண்டு சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது கூடாது. பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் பாத்ரூம் கழுவும் ஆசிட் பட்டால் வைரம் பொலிவை இழக்கும்.

* எண்ணெய்க் குளியலின்போதோ அல்லது தலைக்கு எண்ணெய் தடவும்போதோ வைர நகைகள் அணிய வேண்டாம். எண்ணெய் இறங்கிவிட்டால் சுத்தம் செய்வது கஷ்டம். சுடுதண்ணீரில் குளிக்கும்போதும் வைரம் அணியக்கூடாது. நீச்சல் குளங்களிலும், கடலில் குளிக்கும்போதும் வைர நகைகளை கழற்றி வைப்பது அவசியம்.

* வியர்வை, சென்ட் பாடிஸ்ப்ரே, லோஷன்கள் போன்றவை வைரத்துக்கு விரோதி. இவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் பட்டால் வைரம் கறுக்கும்.

* வைர கல் கறுத்துவிட்டால், சாக்பீஸ் பவுடரை பஞ்சால் தேய்த்து துடைத்தால் பழைய பளபளப்பு வந்திடும்.

* அலமாரி லாக்கர், வங்கி லாக்கரில் அப்படியே வைக்காமல் வெல்வெட் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.

* ஷாம்பு நீரில் சில நிமிடங்கள் ஊற விட்டுக் கழுவி பழைய டர்க்கி டவலால் துடைத்து வைத்தால் பளபளப்பாக இருக்கும்.

* இளம்சூடான நீரில் முக்கி எடுத்து சாஃப்ட் பிரஷால் சோப்பைத் தொட்டு நகைகளை லேசாக அலசியும் சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்யும்போது தங்கம் இருக்கும் பகுதியை கையால் பிடித்துக் கொண்டு, சுத்தம் செய்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்க வேண்டும்.

* விசேஷங்கள், விழாக்களுக்கு வெளியில் சென்று திரும்பியதும் நகையைக் கழற்றி நல்ல தண்ணீர் பாத்திரத்தில் வைத்து, ஒருமுறை கழுவி எடுத்து, மென்மையான காட்டன் துணியில் ஈரமில்லாமல் துடைத்து எடுத்து வைக்கலாம்.

தொகுப்பு: இந்திராணி, சென்னை.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!