×

சென்னை கே.கே.நகரில் மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது: மாநகராட்சி மேயர் பிரியா விளக்கம்

சென்னை: சென்னை கே.கே. நகரில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டது இயற்கையானது என்றும், மழைநீர் வடிகால் பணிக்கும், விபத்திற்கும் தொடர்பில்லை என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சனிக்கிழமையும் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரையில் தூய்மை கண்காட்சி நடைபெற்றது. மட்கும், மட்காத குப்பைகள் குறித்த விளக்கங்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்காட்சியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த நிலையில், தூய்மை கண்காட்சியை மேயர் பிரியா,  ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் விழிப்புணர்வு பேரணியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், சென்னையை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்போம் என பொதுமக்களுடன் சேர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். தூய்மையான சென்னை என்ற இலக்கை அடைய அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கே.கே.நகரில் மரம் விழுந்து பெண் உயிரிழந்ததற்கும், மழைநீர் வடிகால் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். 4 நாட்கள் முன்னதாக பணிகளும் நிறுத்தப்பட்ட நிலையில் இயற்கையாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மரம் சரிந்துள்ளது என விளக்கமளித்தனர். மேலும், மழைநீர் வடிகால் பணிகள் தொடக்கத்தில்தான் தாமதமாக நடைபெற்றது, தற்போது மாநகராட்சியின் தொடர் ஆய்வு காரணமாக பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்த மேயர் பிரியா, நகரில் உள்ள பழமையான மரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று பதில் அளித்தார்.


Tags : KK Nagar, Chennai ,Mayor Priya , Chennai, KK Nagar, Accident, Nature, Corporation Mayor, Description
× RELATED கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள்...