×

1988ல் தேசிய நெடுஞ்சாலைப்பணிகளால் கூட்டத்தை பிரிந்தது 57 வயதான ஜவ்வாது மலை டஸ்கர் யானையை பராமரிக்க வேண்டும்

* நோய் ஏற்பட்டால் தாமதமின்றி சிகிச்சைக்கு ஏற்பாடு
* வனத்துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஆம்பூர் : 57 வயதான ஜவ்வாது மலை டஸ்கர் யானை ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி வனப்பகுதிக்குள் நேற்று நுழைந்ததால் அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 1988ல் தேசிய நெடுஞ்சாலைப்பணிகளால் கூட்டத்தை பிரிந்து, தற்போது, வயதுமூப்பு அடைந்தாலும் கம்பீரமான ஒரு விலங்கினை இனி பார்க்க முடியாது. எனவே அந்த யானையை பராமரிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 13 யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று அப்பகுதியில் வசித்து வந்தன. நீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் இந்த யானைக்கூட்டம் கடந்த 1988ல்  ஜவ்வாது மலைப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அன்றைய சூழலில் என்எச்-46 தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. மலைகளை குடைந்து, சாலைகள் அமைக்கும் பணியால் ஆம்பூர்-பேரணாம்பட்டு இடையிலான யானைகள் வழித்தடம் முற்றிலுமாக அழிந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  
இதனால், ஜவ்வாது மலைப்பகுதிக்கு வந்த யானைக்கூட்டம் திரும்பிச் செல்ல வழியின்றி அப்பகுதியிலேயே சிக்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. மேலும் உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் ஜவ்வாது மலையில் 13 யானைகளை கொண்ட ஒரு கூட்டம் நீண்ட காலம் வாழ்வதற்கான வாழ்வாதாரம் அங்கு இல்லாமல்போனது. இதனால் அந்த யானை கூட்டம்  7 யானைகள் கொண்ட சிறுகூட்டமாக சுருங்கியது.

அந்த யானைக்கூட்டத்தில் ஒரேயொரு தந்தமுள்ள ஒற்றை ஆண் யானை ஒன்று, 2012 ஆம் ஆண்டு தன் கூட்டத்தை பிரிந்து ஜவ்வாது மலைப்பகுதியில் தனித்துவிடப்பட்டது.  எஞ்சிய 6 யானைகள் திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் காட்டுப்பகுதிகளை நோக்கி மாறி, மாறி இடம்பெயர தொடங்கின. இந்த 6 யானைகள் சென்ற இடமெல்லாம் மனித விலங்கு மோதல்கள். பயிர்கள் அழிக்கப்பட்டதால், ₹73 லட்சம் செலவில் ‘ஆபரேசன் மலை’ என்ற திட்டம் மூலம் கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காப்புக் காட்டுப்பகுதியில் ஒரு குட்டி யானை உட்பட இதர யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டன. கும்கி யானைகளின் உதவியுடன் அவை வளமான மேற்குத் தொடர்ச்சி மலையில்  முதுமலை, டாப்ஸ்லிப் பகுதிகளில் விடப்பட்டன.

இந்நிலையில், ஜவ்வாது மலையில் அந்த ‘ஒற்றைக் கொம்பன்’,  ‘ஜவ்வாதுமலை டஸ்கர்’ என்ற பெயர்களில் பொதுமக்களால் அழைக்கப்படும் ஆண்யானை மட்டும் தனித்து வாழத் தொடங்கியது. புல், மூங்கில், சாமை, திணை, பலாப்பழம் போன்றவைதான் அதன் உணவு. வயது 57ஐ எட்டிய நிலையில் அந்த ஒற்றைக் கொம்பன் யானையின் கண்பார்வை மங்கத் தொடங்கியது. எனினும், அதன் கம்பீரம் குறையவில்லை. ஆரம்பத்தில் தானிப்பாடி காப்புக்காடு, மேல் செங்கம், ஆம்பூர், காவலூர், ஆலங்காயம் என சுற்றித்திரிந்த ஒற்றை யானை முதுமை காரணமாக அதன் நடமாட்டப் பரப்பை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டது.

அந்த ஆண் யானை இன்னும் எத்தனைக் காலம் ஜவ்வாது மலையில் உயிர் வாழுமோ என்று தெரியாது. ஆனால் இவ்வளவு கம்பீரமான ஒரு விலங்கை ஜவ்வாது மலையில் இனிமேல் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. தற்போது  தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆம்பூர் வன சரகத்தில் உள்ள சாணாங்குப்பம் காப்பு காடு, நாய்க்கனேரி மலைகாடுகள் அதிகளவில் பச்சைபசேலென உள்ளன. இதனால், இந்த சூழலை விரும்பி பல்வேறு வன விலங்குகள் இடம் பெயர்வதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி இரவு  முதல் ஆம்பூர் அடுத்த நாய்க்கனேரி மலைக்கிராம பகுதியில் யானை ஒன்று பிளிரும் சத்தம் கேட்டது. இதை கேட்ட அப்பகுதியினர் யானையின் இடமாற்றத்தை நேரில் கண்டு உறுதி செய்தனர். இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானை ஊருக்குள் வராத வண்ணம் பட்டாசு வெடித்துள்ளனர்.
இதில், நாய்க்கனேரி ஊராட்சியை ஒட்டி உள்ள பனங்காட்டேரியில் இருந்து மறுநாள் காலை சிலர் வேலைக்காக ஆம்பூருக்கு இரு சக்கர வாகனங்களில் சென்றுள்ளனர். அப்போது அந்த கம்பீரமான தந்தத்துடன் கூடிய ஒற்றை ஆண் யானை சாலையை மறித்தபடி நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சிறிது நேரம் அங்கு இருந்த யானை பின்னர் சாலையை விட்டு அருகில் உள்ள வனபகுதிக்குள் சென்றது. இதை தொடர்ந்து யானை நடமாட்டத்தை உறுதி செய்தபடி பனங்காட்டேரியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியை அச்சத்துடன் கடந்து வருகின்றனர்.‘திருப்பத்தூர்- திருவண்ணாமலை இடையே உள்ள வனப்பகுதிகளை தனது வாழ்விடமாக கொண்ட, இந்த ஒற்றை கொம்பன் யானை, தற்போது முதுமை காரணமாக தனது நடமாட்டத்தை குறைத்து வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட வன கோட்ட அதிகாரிகள் உரிய வகையில் இந்த யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, உரிய வகையில் அதற்கான உணவு வகைகளை வழங்கிட ஏதுவான சூழலை உருவாக்க வேண்டும். உரிய கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் இந்த யானை வனப்பகுதியில் நோய்வாய் பட்டாலோ அல்லது இறந்து கிடந்தாலும், உடனடியாக அதற்குரிய சிகிச்சைகள் செய்வதில் தாமதம் ஏற்பட கூடும்.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த யானையின் உணவு, நீர் ஆதாரத்தை வழங்க தனித்திருக்கும் யானையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

300 லிட்டர் நீர், 200 கிலோ உணவு தேவை

வளர்ந்த ஒரு யானைக்கான ஒருநாள் குடிநீர் தேவை 250 முதல் 300 லிட்டராகவும், உணவுத்தேவையை பொறுத்தவரை புல், மூங்கில், இலைத்தழை என ஒருநாளுக்கான 200 கிலோ உணவும் தேவைப்படுகிறது.

வனத்துறையினர் குரலுக்கு கட்டுப்படும்

ஜவ்வாது மலைப்பகுதியில் வாழும் ஒற்றை தந்த யானைக்கு, ஜவ்வாது மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரின் குரலும் பரிச்சயம். அவர்கள் அந்த யானை வனத்தை விட்டு வெளியே வரும்போது, வனப்பகுதிக்குள் செல்ல கட்டளையிட்டால் அதைக் கேட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்ற வரலாறும் உண்டு.  

விநாயகர் சதுர்த்தியில் கோயிலுக்கு வந்து செல்லும்

இந்த ஒற்றை யானையை பற்றி மேலும் ஒரு சுவாரசியமான தகவலும் உண்டு. ஆலாங்காயத்தில் இருந்து ஆசனாம்பட்டு செல்லும் வழியில் வனப்பகுதியை ஒட்டி ஒரு கோயில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியன்று இந்த கோயில் அருகே இந்த யானை வந்து வழிபட்டு செல்வதாக இந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு தொல்லை கொடுத்ததில்லை

ஜவ்வாது மலையின் அந்த   ஒற்றை யானை, ஆம்பூர்-ஜமுனாமரத்தூர் பகுதிகளுக்கு இடையில் நாள் ஒன்றுக்கு 5  முதல் 6 கி.மீ தொலைவு வரை மட்டுமே இடம் பெயரும். அவ்வப்போது ஏலகிரி  மலைக்கு போய் வரும். போகும் வழியில் கிடைக்கும் பயிர்களை உண்டு  நீர் அருந்தும். அந்த யானை மனிதர்கள் யாரையும் தாக்கியதில்லை.  ஆலங்காயம்-ஒடுகத்தூர், ஜமுனாமரத்தூர்-போளூர் இடையிலான சாலைகளில், காய்கறி  ஏற்றி வரும் வாகனங்களை சிலவேளைகளில் வழிமறித்து காய்கறிகளை சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ளும்.

மற்றபடி அதன் கண்ணில் படும் மனிதர்களுக்கு அது  தொல்லை தந்ததில்லை. காடு செழிக்க யானை ஒன்று போதும்’ என்பதற்கேற்ப இந்த  ஒற்றை யானையின் இருப்பு காரணமாக, ஜவ்வாது மலை செழிக்கத் தொடங்கியது. இந்த  ஒற்றை யானை வனக்காவலராகவும் உள்ளது. இதற்கு பயந்து, காட்டுக்குள் யாரும் ஊடுருவல் செய்வதோ,  மரம் வெட்டுவதோ இல்லை. அந்தப் பகுதியில் சாலையைக் கடந்து செல்லும் வாகன  ஓட்டிகள், அந்த ஒற்றை ஆண்யானையின் நடமாட்டத்தைக் கணித்து, அதன்பிறகே  பயணத்தைத் தொடர்ந்து வந்தனர்.

Tags : National Highway , Ambur: A 57-year-old Javadu mountain Tusker elephant entered the Naikkaneri forest next to Ambur yesterday as hill people in the area.
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...