×

சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது: சஞ்சய் ராவத்

மும்பை: சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வரும் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் மாயமானதில் இருந்து மகாராஷ்டிர அரசியலில் நாளுக்கு நாள் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. சூரத் சென்ற அவருடன் 11 சிவசேனா எம்எல்ஏக்கள் சென்றதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் 30க்கு மேல் உயர்ந்தது.

சூரத்தில் இருந்து வெளியேறி, எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் ஷிண்டே தங்கியுள்ளார். அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 40ஐ தாண்டியுள்ளது. நேற்று இறுதி நிலவரப்படி சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர் தன்னுடன் இருப்பதாக ஷிண்டே கூறியுள்ளார். இதுதவிர சுயேச்சைகளுடன் சேர்த்து அவருடன் ஓட்டலில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 50ஐ தொட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய, சபாநாயகருக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்; சிவசேனா கட்சி மிகப்பெரியது; அவ்வளவு எளிதாக யாராலும் உடைக்க முடியாது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வந்த பிறகு உத்தவ் தாக்கரே பக்கம் வந்துவிடுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிப்பார்கள். முன்னாள் முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் இந்த குழப்பத்தில் தலையிடாமல் தன் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். சிவசேனா தொண்டர்கள் இன்னும் வீதியில் இறங்கி போராடவில்லை, போராடத் தொடங்கினால் தீ பற்றி எரியும். எனவும் தெரிவித்தார்.


Tags : Shiv Sena ,Sanjay Rawat , The Shiv Sena party is huge; No one can break so easily: Sanjay Rawat
× RELATED கொரோனா காலத்தில் மருத்துவமனையிடம்...