×

பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இறைச்சல் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு

கூடலூர் : பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு, குமுளி மலைப்பாதையிலுள்ள இறைச்சல் பாலத்தின் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பெரியாறு அணை தண்ணீர், தேக்கடி ஏரியிலிருந்து சுரங்க வாய்க்கால் வழியாக ‘ஃபோர்பே’ டேமில் தேக்கப்படுகிறது. அங்கிருந்து 4 ராட்சதக்குழாய்கள் மூலம் மின் உற்பத்தி முடித்து வரும் தண்ணீரும், வனப்பகுதி இறைச்சல் பாலம் வழியாக கொண்டு வரப்படும் தண்ணீரும் லோயர்கேம்ப் பகுதியில் ஆற்றில் ஒன்று சேர்கிறது.

இதில் பென்ஸ்டாக் ராட்சதக் குழாய் பைப்கள் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீரும், இறைச்சல் பாலம் வழியாக அதிகபட்சம் வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீரும் கொண்டு வரமுடியும். மதுரை மண்டல நீர்வளத்துறை ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ஞானசேகரன் கடந்த 22ம் தேதி பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு சுரங்க வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து சேரும் ‘ஃபோர்பே’ டேம் பகுதியையும், அங்கிருந்து பென்ஸ்டாக் பைப் வழியாக தண்ணீர் செல்லும் பகுதியையும், இறைச்சல் பாலம் வழியாக தண்ணீர் செல்லும் பகுதியையும் ஆய்வு செய்தார்.

 பின் இறைச்சல் பாலம் வழியாக அதிகப்பட்சமாக எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். இந்நிலையில், தலைமை பொறியாளர் ஞானசேகரன் அறிவுறுத்தலின் பேரில், பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் இறைச்சல் பாலம் வழியாக அதிகப்பட்சமாக எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்லலாம் என மதிப்பீடு செய்வதற்கான கள ஆய்வு, பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின் தலைமையில் இறைச்சல் பாலம் பகுதியில் நேற்று நடைபெற்றது. ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் குமார், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

4,000 கன அடிக்கு வாய்ப்பு

கடந்த 2006ல் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியபோது தமிழகப்பகுதிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதில் இறைச்சல் பாலம் வழியாக வந்த தண்ணீரால் மலைச்சாலையில் உள்ள ரோடு சேதமானது. சாலை சீரமைப்பிற்கு பிறகு இறைச்சல் பாலத்தின் அடியில் உள்ள பாறைகள் உடைக்கப்பட்டு, தண்ணீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது. தற்போது, இறைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு சுமார் 4,000 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Periyar Dam ,Tamil Nadu , Cuddalore, Periyaru Dam, Kumuli,
× RELATED முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு