அடுத்த ஆண்டு முதல் மே 15ம் தேதியே மாங்கனி கண்காட்சி-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி :  அடுத்த ஆண்டு முதல், மே மாதம் 15ம் தேதியே மாங்கனி கண்காட்சி தொடங்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் உறுதி கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி கண்காட்சி மே 15ம்தேதி தொடங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். இவ்வாண்டு மா அறுவடை முடிந்த நிலையில் கண்காட்சி தொடங்கியுள்ளது. கண்காட்சியில் வெளி மாநில மா வகைகள்தான் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. மாங்கனி கண்காட்சியில் உள்ள அரசுத்துறை அரங்குகளில், தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களின் செல்போன் எண்கள், தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

அரசின் மானியத்திட்டங்கள் குறித்தும், எவ்வாறு பெறுவது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் வெளியிட வேண்டும். கெலமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இடத்தை பதிவுசெய்ய லஞ்சம் பெறுகின்றனர். பணம் கொடுத்தால் மட்டுமே பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம், சில நேரங்களில் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

எனவே, குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு, மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கான அரிசியை விவசாயிகளே வழங்க தயாராக இருக்கிறோம். மேலும், மாவட்டத்தில் நெல், ராகி உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் சிறந்த சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். மார்கண்டேயன் நதியில் இருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் கால்வாய்களை தூர்வார வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் செல்லும் தண்ணீரை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்குவதைவிட, விவசாயிகளுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு முதல், மே மாதம் 15ம் தேதியே மாங்கனி கண்காட்சி தொடங்கப்படும். மானியத் திட்டங்கள் தொடர்பான புத்தகம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும். கெலமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்யப்படும். நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல், குறைதீர் கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகளுக்கு மதிய உணவு வழங்குவது தொடர்பாக, அலுவலர்களுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடைகளில் ராகி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கான இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணை ஆற்று தண்ணீர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் நிரப்பப்படுகிறது,’ என்றார்.

Related Stories: