×

சத்தியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு பள்ளி, அங்கன்வாடிகளில் திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு-சீரமைக்கும் பணிகளை தொடங்க பிடிஓக்களுக்கு உத்தரவு

அணைக்கட்டு :  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் சத்தியமங்கலம் ஊராட்சியில் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என மக்கள், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து நேற்று வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, பிடிஓக்கள் சுதாகரன், கனகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பால்வேணிஇளங்கோவன் மற்றும் மண்டல துணை பிடிஓ மணிகண்டன், பொறியாளர்கள் அடங்கிய குழுவினருடன் சத்தியமங்கலத்தில் இயங்கி வரும் அரசு தொடக்க பள்ளி, அங்கன்வாடி மையம், ராமாபுரத்தில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி பிரதமரின் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, பள்ளி வகுப்பறை கட்டிடங்களின் மேற்கூரைகள் உதிர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது, அங்கன்வாடி கட்டிடங்கள் சேதமான நிலையில் உள்ளது, மாணவர்களின் எண்ணிக்கை்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் வேண்டும், கிராமங்களில் சாலைகள் சேதமான நிலையில் உள்ளது புதிய தார்சாலைகள், சிமென்ட் சாலைகள் வேண்டும் என திட்ட இயக்குனரிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து உடனடியாக அனைத்து பணிகளுக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்து சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு பணிகள் அனைத்தும் விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிடிஓக்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பணிகள் விரைவாக தொடங்கப்படும் என கோரிக்கை வைத்த மக்களிடம் உறுதியளித்தார்.
அப்போது ஊராட்சி செயலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் உடனிருந்தனர். முன்னதாக பொய்கை ஊராட்சி சமத்துவபுரம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றதா என ஆய்வு செய்து பிடிஓக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது ஒன்றிய குழு துணை தலைவர் சித்ராகுமாரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் துணை பிடிஓக்கள், ஓவர்சியர்கள் உடனிருந்தனர்.



Tags : Satyamangalam ,Panchayat Government School ,Project Director ,PDOs ,Anganwadis , Dam: Government schools and anganwadis in the Satyamangalam panchayat of the Vellore District Dam Union are in a dilapidated condition.
× RELATED ஈரோட்டில் யானை தாக்கி விவசாயி பலி