×

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 117ஆவது பிறந்த நாள் விழா: சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

சென்னை: சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாளை 26.06.2022 காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராய நகர், போக் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம் அவர்கள் சென்னையில் பொன்னுசாமி கிராமணியார் - சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 26.06.1906ஆம் மகனாகப் பிறந்தார். ம.பொ.சி. அவர்கள் சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணத்தினால் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார்.

தான் பெற்ற அனுபவத்தாலும், சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும், சிறந்த தலைவராகவும், தமிழறிஞராகவும் விளங்கினார். ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளை நன்கு கற்றறிந்து கிராமணி குலம், தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில், சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் ‘சிலம்புச் செல்வர் என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.

ம.பொ.சி அவர்கள் பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர் என்பதோடு மட்டுமல்லாது, சிறந்த நூலாசிரியருமாகவும் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட அவர் எழுதியுள்ள நூல்களில், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழன் குரல், வீரக் கண்ணகி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும், அந்நூலில் தமிழ்நாட்டின் பங்களிப்பினைத் தொகுத்து “விடுதலைப் போரில் தமிழகம்” என்கிற தமிழில் முதலில் வெளிவந்த இந்நூல் இன்றளவும் சரித்திரச் சான்றாக உள்ளது. 1927ஆம் ஆண்டு சாதாரணத் தொண்டராக காங்கிரசில் சேர்ந்து, இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், தமிழக வடக்கு எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைத்திடும் மத்திய அரசு முடிவுக்கு ‘மதராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் எழுப்பிய குரலுக்கு ம.பொ.சி. அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று வீரமுழக்கமிட்டார். ம.பொ.சி. அவர்களின் தீவிர எல்லைப் போராட்டத்தின் காரணமாக திருத்தணி ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்று விடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது.

‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சட்டமன்ற மேலவைத் தலைவராக திறம்பட பணியாற்றியதோடு,  தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றினார்.  1966ஆம் ஆண்டு ம.பொ.சி. அவர்கள் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்கிற நூலுக்கு ‘சாகித்ய அகாதமி விருது’ வழங்கப்பட்டதோடு, அன்னாரின் பொதுத்தொண்டினைப்  பாராட்டி 1972ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினையும் வழங்கி கௌரவித்தது. “மெட்ராஸ் ஸ்டேட்” என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் குரல் எழுப்பியவர் ம.பொ.சி. ஆவார்.

அதனைத் தொடர்ந்து  அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968ஆம் ஆண்டு இதற்கான தீர்மானத்தை சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றினார். அன்று முதல் சென்னை மாகாணம் “தமிழ்நாடு’‘ என்று அனைவராலும் அழைக்கப்பட்டது. ம.பொ.சி. அவர்கள் தன் வாழ்நாள் முழுமையும் தமிழர்களின் நல்வாழ்வு ஒன்றையே தமது இலட்சியமாகக் கொண்டு 1946ஆம் ஆண்டு தமிழரசு கழகத்தை தொடங்கினார். அரசியல், இலக்கியம், கலை ஆகியவற்றில் தமிழ், தமிழர், தமிழ்நாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகிய இவை அனைத்தும் காக்கப்படுவதோடு, அதனை மேன்மையடையச் செய்திட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கமும், தமிழ்த் தொண்டும், அவரின் நாவன்மையும் தமிழக வரலாற்றின் உயர்ந்த மாமனிதராக என்றென்றும் போற்றப்படுபவர் சிலம்புச் செல்வர் என்றால் அது மிகையில்லை.

சிலம்புச் செல்வருக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அன்னாரின் நூற்றாண்டு விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு, 2011 ஆம் ஆண்டு சென்னை, தியாகராயர் நகரில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில், “சிலம்பொலிச் செல்வருடைய குடும்பத்தை நான் இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாக அறிவேன். அவர் ஒரு இயக்கத்தின் தலைவராக, தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராக, போர்க்களம் பல கண்டவராக, வாழ்ந்து மறைந்தவர் என்று சொல்ல மாட்டேன், மறையாதவர், நம் மனங்களிலெல்லாம் நிறைந்து இருப்பவர் சிலம்பொலிச் செல்வர் ஆவார். தமிழைக் காக்க, தமிழர்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டை வளம்பெற்ற நாடாக ஆக்க நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள அவரை நாம் இன்றைக்கும் நினைத்து போற்றுகின்றோம்.

தமிழகத்தில் ஈடுஇணையற்ற தமிழ்ச் செம்மல்களில் ஒருவராகத் திகழ்ந்து இன்றளவும் அனைவருடைய நெஞ்சிலும் நிலைப்பெற்று வாழ்கிறார் சிலம்பொலி செல்வர் ம.பொ.சி. என்று சொன்னால் அது மிகையாகாது” என்று குறிப்பிட்டார். மேலும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் எழுதிய அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கி அவருக்கு பெருமைச் சேர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம்  அவர்களின் பிறந்த நாள் விழா ஜூன் மாதம் 26ஆம் நாள் அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Tags : Chilambhu Selvar ,M.P. Sivagnanam ,Chennai , 117th Birthday Celebration of Chilambhu Selvar M.P. Sivagnanam: Government pays homage to his statue at Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...