×

மதுரை - சென்னை தேஜாஸ் ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கோரிய கடிதங்களுக்கு ஒப்புதல் இல்லை: ரயில்வே வாரியம் அலட்சியம்

சென்னை: மதுரை - சென்னை தேஜாஸ் ரயிலுக்கு, தாம்பரத்தில் நிறுத்தம் கோரி 6 முறை தெற்கு ரயில்வே சார்பில் கடிதம் எழுதியும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்காதது ஆர்டிஐ மூலம் தெரிய வந்து, பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018, ஜூன் 8ம் தேதி,  ₹40.4 கோடி செலவில் சென்னையின் 3வது முனையமான தாம்பரம், அப்போதைய ரயில்வே இணையமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. தாம்பரம் ரயில் நிலையத்தை சராசரியாக ஆண்டுக்கு 7.5 கோடி பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை - மதுரை தேஜாஸ் ரயில் 2019, மார்ச் 1ல் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த ரயில், சென்னை - மதுரை வழித்தடத்தில் இயங்கும் அதிவேக ரயிலாகும்.

தற்போது சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல்லில் நிறுத்தங்களுடன் மதுரையை பகல் 12.15 மணிக்கு அடைகிறது. மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூரை இரவு 9.15 மணிக்கு சென்றடைகிறது.
தேஜாஸ் ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் குறித்து, தாம்பரத்தை சேர்ந்த தயானந்த் கிருஷ்ணன் ஆர்டிஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் அளித்த பதிலில், ‘‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்க்கு தாம்பரத்தில் நிறுத்தம் வழங்கினால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று  தாம்பரம் மேலாளரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து  தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் சார்பில் 6 முறை கடிதங்களும் எழுதப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிறுத்தம் வழங்குவதால் மதுரை செல்லும்போது 6 முதல் 8 நிமிடங்கள் தாமதம் ஏற்படும். அதேநேரம் ஒட்டுமொத்த பயண நேரத்தை இது பாதிக்காது’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயானந்த் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘தேஜாஸ் ரயிலுக்கு  தாம்பரத்தில் நிறுத்தம் வழங்கினால் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்று  ரயில்வே வாரிய போக்குவரத்து உறுப்பினர் அறிவுறுத்தலின் பேரில், தெற்கு ரயில்வே தலைமை பயணியர் போக்குவரத்து மேலாளர்  ரயில்வே வாரியத்திற்கு எழுதிய கடிதத்திற்கு ரயில்வே வாரியம் இன்னும் செவிசாய்க்கவில்லை. சென்னையின் மூன்றாவது முனையமாக விளங்கும் தாம்பரத்தில் நிறுத்தம் வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
 
எழும்பூர் ரயில்நிலையத்தை விட அதிகம்  பேர் தாம்பரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் 65 சதவீதத்திற்கும் மேல் இருக்கைகள் தாம்பரம் ரயில்நிலையத்தில் தான் நிரம்புகிறது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப  பூங்காங்களும், குடியிருப்புகளும் உள்ளன. மேலும் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை குடியிருப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னை பன்னாட்டு விமானநிலையத்துக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் எளிதாக தாம்பரம் ரயில்நிலையத்துக்கு வந்து தேஜாஸ் ரயிலை பிடித்து திருச்சி,  மதுரை போன்ற பெருநகரங்களுக்கு  விரைவாக செல்ல முடியும். இந்த ரயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் அனுமதித்தால் இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எழும்பூருக்கு செல்ல தேவை இருக்காது. இதனால் தேவையில்லாத போக்குவரத்து நெருக்கடி குறையும். எனவே, பரிந்துரை கடிதங்களுக்கு உடனடியாக ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து தேஜாஸ் ரயிலுக்கு தாம்பரத்தில் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும்’’ என்றார்.



Tags : Madurai - ,Chennai ,Tejas ,Dambara ,Railway Board , Letters requesting Madurai-Chennai Tejas train to stop at Tambaram not approved: Railway Board negligence
× RELATED மனைவியை பிரிந்த கணவர் பசியால் கதறிய...