×

மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணி: ரூ.1.14 கோடியில் விரைவில் தயாராகிறது

சென்னை: மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை கடல் அருகில் சென்று ரசிக்கும் வகையில், மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கும் பணியை சென்ைன மாநகராட்சி ₹1.14 கோடி செலவில் விரைவில் தொடங்க உள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளில் நீண்ட பெரிய கடற்கரையை கொண்டது மெரினா மட்டுமே. உலகின் 2வது மிகப் பெரிய கடற்கரையாக திகழ்கிறது. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகு சாலைகள், பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட உலகப் புகழ் பெற்ற சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம், கடலில்  கால் நனைத்து, உடலும் மனம் மகிழ்ந்து, உள்ளமெல்லாம் குளிர்ந்து சந்தோஷமாக  திரும்புகின்றனர். கடற்கரை மணலில் காலாற நடந்து, அப்படியே கடலில் போய் கால் நனைத்து விட்டு வர யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் இது  பெரும் கனவாகவே இருந்து வந்தது.
 
பெரும்பாலான  மாற்றுத்திறனாளிகளால் மெரினா கடற்கரையின் நீண்ட மணற்பரப்பில் நடந்து சென்று  கடல் வரை செல்வது என்பது இயலாத காரியம். அவர்களால் அத்தனை தூரத்திற்கு  நடந்து செல்வது கடினம் என்பதால் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா  கடலில் கால் நனைப்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
 
எல்லோரும் கடலில்  போய் விளையாடி விட்டு வருவதை மணற்பரப்பில் அமர்ந்தபடி வேடிக்கை மட்டுமே  அவர்களால் பார்க்க முடிகிறது. அவர்களின் மனதுக்குள் எழும் அந்த ஏக்க  அலைகளும் ஓய்ந்தபாடில்லை. அவர்களின் குறைகளும் தீர்ந்தபாடில்லை. இதனால், சென்னையில் உள்ள ஊனமுற்றோர் உரிமை இணையம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்  திறனாளிகள் நல அமைப்புகள், சாதாரண குழந்தைகளைப் போல, மாற்றுத் திறனாளி  குழந்தைகளும் கடல் அலையை ரசிக்கவும், அலையில் கால்களை நனைத்து மகிழவும்  ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தன.
 
அவர்களின் கோரிக்கை ஏற்று சென்னை மாநகராட்சி நிர்வாகம், மாற்றுத் திறனாளிகளுக்காக பண்டிகை காலங்களில் மட்டும் மெரினா கடற்கரையில் தற்காலிக நடைபாதை அமைப்பதை வழக்கமாக வைத்துள்ளது. அதாவது கடற்கரை சாலையிலிருந்து கடல் வரைக்கும் இந்த தற்காலிக பாதை அமைக்கப்படும். இந்தப் பாதை வழியாக வீல்சேர்கள், இரு சக்கர, 3 சக்கர வாகனங்களில் மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று கடலில் கால் நனைக்க வழி செய்யப்படுகிறது.
 
ஆனால் இது தற்காலிக பாதைதான். இந்த திட்டத்தால் மாற்றுத் திறனாளி குழந்தைகள் முதல் முதியவர் வரை கடல் அலையை ரசிப்பது, கடல் நீரில் காலை நனைத்து விளையாடுவது என மிகவும் உற்சாகமாக காணப்பட்டனர். எனவே, இதை நிரந்தமாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
 
எனவே, இந்த தற்காலிக நடைபாதையை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்றும், நல்ல அகலமான நடைபாதையை நிரந்தரமாக அமைத்து மாற்றுத்திறனாளிகளின் மனதைக் குளிர வைக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். அதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தரமாக நலம் பயக்கும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்து வந்ததது.
 
மறைந்த முதல்வர் கலைஞர் தான், உடல் ஊனமுற்றோர் என்ற சொல்லை மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்ற பதத்தைக் கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மக்களின் தேவைகளைப் புரிந்து, அறிந்து ஒவ்வொன்றாக செய்து வருகிறார். அதேபோல மாற்றுத் திறனாளிகளின் இந்த ஆசையையும் நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
அதாவது, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்த நடை பாதை அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த தகவல் மாற்றுத்திறனாளிளின் மனதை குளிரச் செய்வதோடு அவர்களின் நீண்ட காலம் ஆசை நிறைவேறும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
மெரினா கடற்கரையில் எந்த ஒரு பணிகளை செய்தாலும் சுற்றுச்சூழல் கருதி, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். இப்பணிகளை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி விண்ணபித்திருந்தது. அதற்கான அனுமதியை கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது. இதையடுத்து, இதற்கான பணிகள் விரைவி்ல தொடங்கப்பட உள்ளது.


Tags : Marina Beach ,sea wave , Construction of permanent walkway at Marina Beach for the disabled to enjoy the sea wave: Rs.1.14 crore soon to be ready
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்