சிறுமிகளை கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோவில் 2 பேர் கைது: 8 பேருக்கு வலை

அண்ணாநகர்: விருத்தாசலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின்  16 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவருக்கும்,  கடந்த ஆண்டு ஜூன் 24ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு கடந்த 15ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் விசாரணையில், சிறுமிக்கு 15 வயதில் திருமணமாகி 16 வயதில் குழந்தை பெற்றது தெரியவந்தது.

இதேபோல், கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் 17 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி  திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு  கடந்த மாதம் 25ம் தேதி போரூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட அச்சிறுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு 16 வயதில் சிறுமிக்கு திருமணமாகி மறுவருடமே குழந்தை பிறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளின் கணவர்கள் பிரகாஷ், முருகன் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது குடும்பத்தினர் 8 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: