சென்னையில் கடந்த ஒரு ஆண்டில் கண்புரை பாதிப்புகள் 5 மடங்கு அதிகரிப்பு: டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ் தகவல்

சென்னை: சென்னையில் ஒரு ஆண்டுக்குள் கண்புரை பாதிப்புகள் முதியோர்கள் மத்தியில் 5 மடங்காக அதிகரித்திருக்கின்றது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ் கூறினார்.

இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய தலைவரும், முதுநிலை கண் மருத்துவ நிபுணருமான டாக்டர் சீனிவாசன் ஜி.ராவ் கூறியதாவது: கடந்த ஒரு ஆண்டில் சென்னையில் கண்புரை பாதிப்பு நேர்வுகளின் எண்ணிக்கை, குறிப்பாக 50-70 ஆண்டுகள் வயது பிரிவில் 5 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் ஒவ்வொரு 100 வெளி நோயாளிகளிலும் 40-60 நபர்களுக்கு கண்புரை பாதிப்பு நிலைகள் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு இறுதி-நிலை (முற்றிய) கண்புரை பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. கோவிட் தொற்று பரவலுக்கு முந்தைய ஆண்டுகளின் போது இந்த எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு 100 வெளிநோயாளிகளில் வெறும் 10 நபர்கள் என்ற அளவிலேயே இருந்தது.

எனவே கண்ணுக்கு உட்புறத்திலான அழுத்தத்தைப் பரிசோதிக்க கண் பரிசோதனைகளை 40 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் செய்து கொள்ள வேண்டும். அதைப்போலவே, 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கண்புரை பாதிப்பிருக்கிறதா என்று அறிய ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனைகளை செய்த வேண்டும். பார்வைக்கூர்மை பரிசோதனை, சிறுபிளவு விளக்கு பரிசோதனை, வண்ணப்பார்வைத்திறன் பரிசோதனை, எதிரிடை நிற பரிசோதனை, விழிப்பாவை விரிவு மதிப்பீடு மற்றும் விழித்திரை மதிப்பீடு ஆகியவை மேற்கொள்ளப்படுவதற்கு பரிந்துரைக்கப்படும் சோதனைகளுள் உள்ளடங்கும்.

கண்புரை அறுவைசிகிச்சைகள், அனைத்து பருவங்களிலும் செய்யப்படுவதற்கு பாதுகாப்பானவை. தமிழ்நாட்டில் கண்புரை அறுவை சிகிச்சையின் பாதுகாப்புத்தன்மை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது மற்றும் உள்கண்வில்லைகளில் நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்கள் பார்வைத்திறன் சௌகரியத்தையும் மற்றும் நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சைப் பலனையும் மேலும் அதிகரித்திருக்கின்றன.

வைட்டமின் சி மற்றும் இ ஆகியவற்றை அதிகமாக உள்ளடக்கிய உணவுகளை உட்கொள்வது, ஊறஊதாக்கதிர்களுக்கு வெளிப்படுவதை தடுக்க குளிர் கண்ணாடிகளை அணிவது, நீரிழிவு மற்றும் பிற வாழ்க்கைமுறை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை முக்கியமான அம்சம்.

ஆரஞ்சு வகை பழங்கள், தக்காளிப் பழங்கள், சிவப்பு மற்றும் பச்சை மிளகு, ஸ்ட்ராபெர்ரி, உருளைக் கிழங்கு, கிவி, புரோகோலி, பருப்பு வகைகள் மற்றும் பாதாம் பருப்புகள் ஆகியவை கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. புகை பழக்கம் மற்றும் மதுபான நுகர்வை குறைத்துக் கொள்வதும் கண்புரை பாதிப்பை தடுப்பதற்கான வழிமுறைகளாக இருக்கின்றன. இவ்வாறு கூறினார்.

Related Stories: