குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் தீக்குளிப்பு; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்சி: குடும்பத்தினருடன் விடுதலை செய்யக்கோரி திருச்சி முகாம் சிறையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இலங்கை தமிழர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 144 பேர் அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கை தமிழர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ரமணன் (41) தன்னையும், தனது குடும்பத்தினரையும் விடுதலை செய்யக்கோரி தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் ஓடி வந்து அவரது உடலில் தண்ணீர் ஊற்றியும், போர்வையைக்கொண்டும் தீயை அனைத்தனர்.

இதில் தீக்காயமடைந்த ரமணனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற கந்தசாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 3 வருடங்களாக முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது போலி பாஸ்போர்ட், கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: