காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம்: சங்க கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு, மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

 சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர்கள் பி.பி.லட்சுமணன், தர்மபுரி ராஜேந்திரன், மாநில கூட்டமைப்பு தலைவர் மதுரை செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

 அனைத்து மாவட்டங்களிலும் நீர்த்தேக்க தொட்டியை  இயக்குபவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். மேலும், நிலுவை தொகையினையும் வழங்கிட வேண்டும்.

பல ஆண்டுகளாக பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.சம்பத், திருவண்ணாமலை மாவட்டம் வேலு, செங்கல்பட்டு மாவட்டம் சாலமன், காஞ்சிபுரம் மாவட்டம் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: