×

மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிப்பு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கை, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா கவனித்து வருகிறார். பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு நீண்ட வருடங்களாக இருந்து வரும் நீரிழிவு நோயால்  அவரது வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தது. இதை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்த் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து டாக்டர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் கடந்த 15ம் தேதி அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விஜயகாந்தின் உடல்நலம் தொடர்பாக அவரது  மனைவி பிரேமலதாவிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி நலம்  விசாரித்தார். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விஜயகாந்த் நலம்பெற வாழ்த்து  தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் டாக்டர்கள் ஆலோசனைப்படி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Tags : Vijaykanth , Vijaykanth discharged from hospital
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...