×

மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த திட்டம்: டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரியை தொடர்ந்து, டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை திரும்ப வழங்கலாம். காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.  அதன்படி இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் பாட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன. அதில் 18 லட்சத்து 50 ஆயிரம் காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை விற்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. 63 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மற்ற மலைவாசஸ்தலங்களில் 59 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் மட்டும் 18 லட்சத்து 50 ஆயிரம் காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை ஏன் அமல்படுத்தக் கூடாது. இந்த பாட்டில்கள் ஏரிக் கரைகளில் வீசி உடைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. 18.50 லட்சம் பாட்டில்களை எப்படி டிஸ்போஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாட்டில்களை விற்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் 10 நாட்களில் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
 
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கப்படும். இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைந்து திட்டம் வகுக்கப்படும் எனக் கூறி அதற்கு கால அவகாசம் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், ஜூலை 15ம் தேதிக்குள் இத்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வு விளம்பரங்கள் வெளியிட வேண்டும். தனியார் பார்களும், ஓட்டல்களும், பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மதுவிலக்கு ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15க்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,Tasmag ,Tamil Nadu , High Court orders Tasmag management to implement liquor withdrawal scheme across Tamil Nadu
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...