×

அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு இபிஎஸ் ஆதரவாளர்கள் மறைமுகமாக ஓபிஎஸ்சிடம் பேசி வருகின்றனர்: ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பகீர் பேட்டி

சென்னை: ஓபிஎஸ்  ஆதரவாளரும் வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞரணி மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை கொளத்தூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
 அதிமுக பொதுக்குழுவில் குண்டர்கள்தான் அதிக அளவில் கலந்துகொண்டனர். அதிக அளவில் ஆட்களை குவித்து விட்டால் ஓபிஎஸ் வரமாட்டார் என கணக்கு போட்டார்கள். ஆனால் தனியாக வந்து தனது ஆளுமையை  நிரூபித்துள்ளார் ஓபிஎஸ்.
   
ஓபிஎஸ் அணி பிரிந்து இருந்த காலத்தில் அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எத்தனை பேர் வந்து காலில் விழுந்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்போது இதே இபிஎஸ் இரட்டை தலைமை என கூறினார். தற்போது அவர் ஒற்றைத் தலைமை எனக் கூறி வருகிறார். தங்களுக்கு ஆதாயம் வரவேண்டும் என்பதற்காக பொதுக்குழு, செயற்குழு நடந்த பகுதியில் இருந்த பேனர்களை அவர்கள் கிழித்தார்கள். எந்த ஒரு உண்மையான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவனும்  ஜெயலலிதா போட்டோவையும் எம்ஜிஆர் போட்டோவையும் கிழிக்க மாட்டான். ஆனால் இவர்கள் அதையும் செய்து காண்பித்துள்ளார்கள்.
 
ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் ஓட்டெடுப்பு நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்  தலைவராக வரட்டும். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு மாபெரும் தலைவரை பொதுக்குழு, செயற்குழுவில் அழைத்து எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அவமானப்படுத்தி அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.  ஒரு மாவட்ட செயலாளர் பதவியைக் கூட விட்டுத் தர தயாராக இல்லாத இபிஎஸ் எப்படி ஒரு தலைவராக முடியும். நடந்து முடிந்த பொதுக்குழு, செயற்குழு செல்லாது என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் அவைத்தலைவர் பதவியும் செல்லாது, அப்போது மீண்டும் பொதுக்குழு, செயற்குழு கூட்ட வேண்டும் என்றால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் கூட்ட முடியாது.
 
அதிகார அழுத்தம் மற்றும் பண அழுத்தம் காரணமாகவே தற்போது மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ்சுடன் இணைந்து உள்ளனர். பொதுக்குழு, செயற்குழு முடிந்த பின்பு அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் ஓபிஎஸ்சிடம் மறைமுகமாக பேசி வருகின்றனர். தற்போது  பொறுப்பில் உள்ள 150 பேர் சேர்ந்து ஓபிஎஸ்சை ஓரம் கட்ட முடியாது. முடிந்தால் ஓரம்கட்டி பாருங்கள். தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் கொந்தளிப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தற்போது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவரை யாரோ மிரட்டி இயக்குகிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றுபட்டு பேசி உட்கார்ந்து நல்ல முடிவை எடுக்கவேண்டும். தொண்டர்களை குழப்பக் கூடாது. அப்போதுதான் அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : EPS ,OBS ,AIADMK ,OPS ,Krishnamurthy Pakir , EPS supporters speak to OBS indirectly after AIADMK general body: Interview with OPS supporter Krishnamurthy Pakir
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...